பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 – பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் செய்திருந்த வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார்.
இதனால், அன்வாரின் மனைவியும் நடப்பு கட்சித் தலைவருமான வான் அசிசா இஸ்மாயில் போட்டியின்றி தேர்வு பெற்றார்.
பிகேஆரின் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து அவரின் மனைவி வான் இஸ்மாயிலும் அதே பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இருவரில் ஒருவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வார்கள் எனவும், இது ஓர் அரசியல் வியூகம் என்றும் கட்சி வட்டாரங்கள் இதுவரை தெரிவித்து வந்தன.
அன்வார் இப்ராகிம், இன்று பிகேஆர் தேர்தல் ஆணையத் தலைவர் ஜொஹாரி அப்துல்லாவை சந்தித்து தனது தேர்தல் மனுவை வாபஸ் பெற்றார்.
தற்போது அவரின் மனைவி வான் அசிசா இஸ்மாயில் போட்டியின்றி பிகேஆரின் தலைவர் பதவிக்கு தேர்வாகியிருப்பதால், இனி கட்சியின் தேசியத் துணைத் தலைவர் பதவியை நோக்கி கட்சியினரின் அனைத்து கவனமும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே வேளையில் ஐந்து தேசிய உதவித் தலைவர்களாக யார் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்ற பரபரப்பு கூடி கட்சி வட்டாரங்களில் பிரச்சாரங்கள் அனல் பறப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.