சென்னை, ஏப்ரல் 24 – இன்று தமிழகம் உட்பட 117 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் எங்கே வாக்களிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதி ஆர்வம்.
நடிகர்களும் இந்த விவரங்களை ஒவ்வொரு முறையும் தவறாமல் ஒரு நாள் முன்பே சொல்லிவிடுவார்கள்.
ரஜினி எந்த வாக்குச் சாவடியில் ஓட்டுப் போடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். வழக்கம் போல தன் வீட்டுக்கு அருகில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் முதல் நபராக வந்து வாக்களித்தார்.
கடந்த முறை அவர் வாக்களித்த போது, எந்த சின்னத்துக்கு அவர் வாக்களித்தார் என்பதை படமெடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
கமல் ஹாசன் பெங்களூரில் ‘உத்தமவில்லன்’ படப்பிடிப்பில் உள்ளார். ஓட்டுப் போடுவதற்காக இன்று படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை வந்தடைந்தார்.
காலை 8 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் அவரது அலுவலகத்திற்கு எதிரே உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார்.
‘கத்தி’ படப்பிடிப்பில் உள்ள விஜய், அடையாறில் உள்ள மாநகராட்சி பள்ளியில் காலையில் வாக்களித்தார்.
நடிகர் அஜீத் திருவான்மியூர் குப்பம் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் காலை 7 மணிக்கு மனைவி ஷாலினியுடன் சென்று ஓட்டு போட்டார்.
நடிகர் சூர்யா, ‘அஞ்சான்’ படப்பிடிப்புக்காக மும்பையில் உள்ளார். கார்த்தியும் விளம்பர படமொன்றுக்காக மும்பை சென்றுள்ளார். இருவரும் ஓட்டு போடுவதற்காக விமானம் மூலம் சென்னை வந்தனர்.
தியாகராயநகரில் உள்ள இந்து பிரசார சபாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் பகல் 12 மணிக்கு ஓட்டு போடுகிறார்கள். அவர்களுடன் நடிகர் சிவகுமார், சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரும் அதே வாக்கு சாவடியில் ஓட்டு போடுகின்றனர்.
விஷால் அண்ணா நகரில் தனது வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் ஓட்டு போடுகிறார். விக்ரம் பெசன்ட் நகரில் ஓட்டு போடுகிறார். ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு,ஜீவா, பரத், ஆர்யா, நடிகை த்ரிஷா போன்றோரும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு ஓட்டு போடுகின்றனர்.