சாவ்பாலோ, ஏப்ரல் 24 – பிரேசில் நாட்டில் அரசுத்துறைகளில் காணப்படும் லஞ்சம், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் கல்வி, சுகாதாரக்குறைவு போன்ற காரணங்களினால் அந்நாட்டில் கடந்த ஆண்டு முதல் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.
இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருக்கும் உலகக் கால்பந்து போட்டிகளுக்காக அரசு கோடிக்கணக்கில் வரிப்பணத்தை செலவு செய்வதும் அங்கு போராட்டங்கள் பெருகக் காரணமாயிற்று. சமீப காலங்களில் சில பிரிவினர் அங்குள்ள பேருந்துகளை எரித்து தங்களின் எதிர்ப்பைக் காண்பித்து வருகின்றன.
இது பழிக்குப் பழி நடவடிக்கையாகவும், போதை மருந்து வர்த்தகத் தகராறுகளில் காவல்துறையினரின் நீண்டகால குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்ப்பது என்ற வகையிலும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து சாவ்பாலோ நகரிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இதுவரை 364 பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 115 தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாகவும் தொலைக்காட்சித் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்குமுன் 12 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரின் சுற்றுப்புறப் பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதை எதிர்த்தும் பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் நேற்று முன்தினம் சாவ்பாலோவிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள ஒசாச்கோ என்ற இடத்தில் செயல்பட்டுவந்த தனியார் பேருந்து டிப்போ ஒன்றில் புகுந்த ஆயுதமேந்திய போராளிகள் அங்கிருந்த 34 பேருந்துகளைத் தாக்கி தீ வைத்துள்ளனர். இவற்றில் 23 பேருந்துகள் முற்றிலும் எரிந்துவிட்டன. மீதி 11 பேருந்துகள் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளன.
குறைந்தது ஆறு பேர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் நிறைய ஆயுதங்களை வைத்திருந்தனர். இங்கிருந்த ஊழியர்கள் சிலரையும் அவர்கள் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் என்று அந்நிறுவனத்தின் மேலாளர் மிகல் டி ஆல்பர்கியு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போதை மருந்து வர்த்தகத்தில் கடுமையான போட்டி நிலவும் இந்தப் பகுதியில் திங்கட்கிழமையன்று நிகழ்ந்த கடத்தல்காரர் ஒருவரின் மரணத்தின் விளைவாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை கருத்து தெரிவித்துள்ளது.