பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 24 – காணாமல் போன எம்.எச். 370 விமானம் ஆப்கானிஸ்தானில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று அவ்விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னதாக மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் தெற்காசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய உளவுத் துறை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அவ்விமானத்தை ஆப்கானிஸ்தானில் தேடுமாறு மலேசிய அரசாங்கத்திற்கும், இடைக்கால போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடினுக்கும் பிரதமருக்கும் கடந்த ஏப்ரல் 14இல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் சமிக்ஞைகள் கிடைக்கப் பெற்றதையடுத்து அங்கு தீவிர தேடும் பணியில் ஆஸ்திரேலியா நாட்டினரும் அனைத்துலக குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
எம்.எச்.370 விமானம் காணாமல் போய் 47 நாட்கள் ஆகியும் எந்தவொரு தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.
இதனிடையே, காணாமல் போன எம்.எச்.370 விமானத்தை தேடுவதற்கு அரசாங்கம் அனைத்துலக குழு ஒன்றை நியமித்துள்ளதாக இடைக்கால போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.