Home உலகம் சிரிய அதிபர் தேர்தலில் பஷார் அல் ஆசாத் மூன்றாவது முறையாக போட்டி!

சிரிய அதிபர் தேர்தலில் பஷார் அல் ஆசாத் மூன்றாவது முறையாக போட்டி!

527
0
SHARE
Ad

SYRIAடமாஸ்கஸ், ஏப்ரல் 29 – சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியின் மீதான அதிருப்தி, எதிர் கட்சியினரின் கிளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி, அங்கு பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில் ஆசாத் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆசாத் தன்னை அதிபர் பதவிக்கு பரிந்துரைத்து, அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் லஹாம் நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு தொலைக்காட்சி அமர்வின் போது வெளியிட்டார்.

அதிபரைத் தவிர இன்னும் சிலர் இந்தத் தேர்தலில் நிற்க முன்வந்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு கருதி வெளிநாடுகளில் மறைவாக வாழும் இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், சிரியாவில் கடந்த நாற்பதாண்டுகளாக நடைபெற்றுவரும் அதிபர் ஆசாத்தின் குடும்ப ஆட்சியை நீட்டிக்க இது ஒரு தந்திரம் என்று கூறி தேர்தலை நிராகரித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

சிரியாவின் அரசியலமைப்போ, அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள் ஆசாத் சார்பு நாடாளுமன்றத்தின் 35 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்றும், வேட்பாளர்கள் கடந்த 10 வருடங்களில் சிரியாவை விட்டு வெளியே வாழ்ந்திருக்கக்கூடாது என்றும் குறிப்பிடுகின்றது.

ஆசாத்தை எதிர்க்கும் மேற்கத்திய மற்றும் அரபு நாடுகள் இந்தத் தேர்தலை கேலிக்கூத்து என்று கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவின் தற்போதய நிலையில், தேர்தல் நம்பகமான சூழ்நிலையில் நடைபெறாது என்று அந்நாடுகளின் தலைவர்கள் கூறிவருன்றனர்.