சென்னை, மே 1 – இன்று காலை 7.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த பெங்களூர் – கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே காவல் துறையிடமிருந்து, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு இந்த வழக்குமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி – காவல் துறை இயக்குநர் – ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள்கிடைத்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்புகள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.15 மணி அளவில்அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.
இதில் ஆந்திரா மாநிலம் குண்டூரைசேர்ந்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் 14 பேர்படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்குதேவையான அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும், மற்றவர்கள் அனைவரும் இலேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.