Home இந்தியா குண்டு வெடிப்பில் பலியான சுவாதிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி – ஜெயலலிதா

குண்டு வெடிப்பில் பலியான சுவாதிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி – ஜெயலலிதா

563
0
SHARE
Ad

jayalalithaசென்னை, மே 2 – சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான சுவாதி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெங்களூருவிலிருந்து கவுகாத்தி செல்லும், கவுகாத்தி விரைவு ரயில் நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தவுடன், சுமார் 7.15 மணிக்கு அதன் இரண்டு ரயில் பெட்டிகளில் குண்டு வெடித்ததில் ஒரு பெண் உயிரிழந்தார் என்ற செய்தியையும், 14 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியையும் அறிந்து துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

#TamilSchoolmychoice

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளவும் நான் உத்தர விட்டுள்ளேன். இந்தக் கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தரவும் அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காய மடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து அளிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின் பேரில், இந்த ரயில் வெடிகுண்டுச் சம்பவம் குறித்து விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனவே, இந்தச் சம்பவத்தினால் தமிழக மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.