Home அவசியம் படிக்க வேண்டியவை செல்லியல் பார்வை: சூசன் ரைஸ் சந்திப்பால் – ஒபாமா வருகையை சாதகமாக்கிக் கொண்ட அன்வார்!

செல்லியல் பார்வை: சூசன் ரைஸ் சந்திப்பால் – ஒபாமா வருகையை சாதகமாக்கிக் கொண்ட அன்வார்!

607
0
SHARE
Ad

#TamilSchoolmychoice

anvaarகோலாலம்பூர், மே 2 – அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வரலாற்றுபூர்வ வருகை நிறைவு பெற்றுவிட்ட நிலையில், அந்த வருகையின் போது முக்கிய இடம் பிடித்த ஓர் அம்சம் அன்வார் இப்ராகிம் விவகாரம்தான்.

நஜிப்பின் அரசாங்கம் பலத்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்திக் காட்டிய ஒபாமாவின் மலேசிய வருகையால் அதிகம் பயனடைந்தவர் – அரசியல் லாபம் பார்த்தவர் என்றால் அது அன்வார் இப்ராகிம்தான்.

தனது சமயோசிய அரசியல் வியூகத்தால், ஒபாமாவின் வருகையை தனக்கு சாதகமான அரசியல் களமாக அன்வார் உருமாற்றிக் கொண்டுள்ளார்.

ஒபாமாவின் வருகைக்கு முன்பாகவே, அவர் அன்வாரைச் சந்திப்பாரா என்ற ஆரூடங்களை மலேசியாவின் இணைய செய்தித் தளங்கள் வெளியிட்டு முதலில் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தியா போன்ற மற்ற ஜனநாயக நாடுகளில் முக்கிய நாட்டின் தலைவர்கள் வருகை தரும்போது,  நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரையும் மரியாதை நிமித்தம் சந்தித்து, எதிர் தரப்பு அரசியல் விவகாரங்களையும் கேட்டு அறிந்து கொள்வதுதான் ஜனநாயக மரபு.

ஆனால், மலேசியாவில் எந்த காலத்திலும் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதில்லை.

இந்த முறை ஒபாமா அந்த மரபைத் தொடக்கி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்த வேளையில், சாமர்த்தியமாக அன்வாருடனான அதிகாரபூர்வ சந்திப்பை மலேசிய அரசாங்கம் தவிர்த்து விட்டது.

ஒபாமாவுடன் சந்திப்பு நடத்தியிருந்தால் அது அமெரிக்க அரசாங்கத்தின் ஜனநாயக  மரபுக் கொள்கைக்குப் பொருத்தமாக obamaஇருந்திருக்கும் என்று அன்வாரும் அறிக்கை விட்டார்.

ஆனால், ஒபாமாவும், நஜிப்பும் இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அன்வாரைச் சந்திக்காதது பற்றி ஒபாமாவிடம் வினவப்பட்டபோது, “அன்வாரைச் சந்திக்காததால் அவரது விவகாரத்தில் எனக்கு அக்கறையில்லை என்று அர்த்தமாகாது” என்று ஒபாமாவும் பதிலளித்து அன்வாருக்கு முக்கியத்துவம் அளித்தார்.

இதன் மூலம், அன்வார் விவகாரம், ஒபாமாவின் வருகையின் போது,‘உயிருடன் இருக்கும் வகையில் தொடர்ந்து நிலைநாட்டப்பட்டது.

சூசன் ரைசுடன் அன்வார் சந்திப்பு

இந்த சூழ்நிலையில்தான் அன்வார் இப்ராகிமின் அரசியல் சக்தியையும், எதிர்க்கட்சிகளின் பலத்தையும், மலேசிய அரசியலில் அவர்களின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்ட அமெரிக்க அரசு,

திடீரென, ஒபாமாவின் மலேசிய வருகையின் இறுதி நாளான திங்கட்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் ஏற்பாடுகளைச் செய்தது.

இது முன் கூட்டியே திட்டமிடப்படாத நிகழ்வு என்றும் இறுதி நேர நெருக்குதலால் மேற்கொள்ளப்பட்ட முடிவு என்றும் கூறப்படுகின்றது.

susanஅன்வார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சூசான் ரைஸ் சந்திக்காமல் போயிருந்தால், ஒபாமாவின் வருகை மலேசியர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தைத் தந்திருக்கும். ஒரு பெரிய காலியிடத்தை ஏற்படுத்தியிருக்கும்.

50 சதவீதத்திற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி ஆதரவு வாக்காளர்களைக் கொண்ட மலேசிய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம்தான் திடீரென இறுதி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை சூசன் ரைஸ் சந்திக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அன்வாரின் வழக்குகளையும் மலேசியாவின் ஜனநாயக நடைமுறைகளையும் அமெரிக்க அரசாங்கம் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அச்சந்திப்பிற்கு பிறகு வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை கூறியது.

சந்திப்பிற்குப் பிறகு அன்வார் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க-மலேசிய உறவுகளில் வர்த்தகம், பாதுகாப்பு, இதர பாரம்பரிய விஷயங்கள் மட்டுமின்றி மனித உரிமைகள், நல்லாட்சி ஜனநாயகம் ஆகியவற்றையும் உள்ளடக்க வேண்டும் எனத் தாம் சூசன் ரைஸிடம் கூறியதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டதன் மூலம் ஒபாமாவின் வருகை ஒரு முழுமை பெற்றது எனலாம்.

சூசன் ரைஸ் அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய அங்கம்

அமெரிக்க அரசியல் அமைப்பை அறிந்தவர்கள், ஒபாமாவின் கீழ் உள்ள அரசியல் ஆலோசகர்களின் முக்கியத்துவத்தையும், பலத்தையும் நன்கு தெரிந்திருப்பார்கள்.

அந்த வகையில் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற முறையில் சூசன் ரைஸ் அமெரிக்க அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கும் பலமும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைச் சந்தித்து விவரங்களைச் சொல்வதும் அதிபரைச் சந்தித்து சொல்வதும் ஒன்றுதான்.

அந்தஅளவுக்கு அவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள் என்பதுதான் அமெரிக்க அரசின் மரபு. முக்கியமான கட்டங்களில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரின் முடிவுதான் செயல்படுத்தப்படும்.

அந்த வகையில், ஒபாமா அரசாங்கத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் சூசன் ரைசைச் சந்தித்து தனது தரப்பு அரசியல் Susanவிவகாரங்களை எடுத்துக் கூறியிருப்பது –

அதுவும் ஒபாமா வருகையின் ஊடே இதனை நிகழ்த்திக் காட்டியிருப்பது – அன்வாரின் அனைத்துலக ராஜதந்திர அரசியல் வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.

மக்கள் இயக்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு

அதே வேளையில், மலேசியாவில் ஜனநாயக உரிமைகளுக்காகவும், சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் நடைமுறைகளுக்காகவும் போராடும் மக்கள் இயக்கப் பிரதிநிதிகளையும் நேரடியாக சந்திக்க நேரம் ஒதுக்கியதன் மூலம் இந்த போராட்டவாதிகளுக்கு ஒபாமா முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார்.

அந்த சந்திப்பில் நஜிப்பின் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கும் மக்கள் இயக்கப் பிரதிநிதிளை – போராளிகளைச் சந்தித்து அவர்களின் மாறுபட்ட கருத்துக்களையும் ஒபாமா கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கின்றார்.

முதலில் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட இந்த சந்திப்பு பின்னர் 50 நிமிடங்களுக்கும் மேலாக நீண்டதும்,

ஒபாமா அவர்களுக்குத் தந்த முக்கியத்துவத்தின் மற்றொரு கோணமாகப் பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம், மலேசியாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜனநாயக மாற்றங்களுக்கான, மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தனக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இருக்கும் ஈடுபாட்டையும் அக்கறையையும் ஒபாமா தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

குறிப்பாக, ஒபாமாவுடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன், “ஒபாமாவிடம் நஜிப் சொல்லாதவற்றை நாங்கள் எடுத்துக் கூறியிருக்கின்றோம்” என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.

ஆக, ஒபாமாவின் வருகையை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் அமைப்புகளையும் சந்தித்திருப்பதன் மூலமும் –

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமையும், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களையும் தனது பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசைச் சந்திக்கச் செய்ததன் மூலமும்,

ஒபாமா தனது வருகையை எல்லா வகையிலும் வெற்றிகரமான ஒன்றாக – யாரும் குறையேதும் சொல்ல முடியாத வகையில் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றார்.

அதே வேளையில், ஒபாமாவை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவர் மலேசியாவில் இருந்த மூன்று நாட்களிலும் தனது பெயரையும் – தகவல் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெறச்செய்ததன் மூலமும்,

அமெரிக்க அரசாங்கத்தின் அதிகார மையத்துடன் தனக்கிருக்கும் நெருக்கத்தையும், தனக்கு தரப்படும் முக்கியத்துவத்தையும் மலேசிய மக்களுக்கு எடுத்துக் காட்டியிருப்பதன் மூலம் –

தனது அரசியல் சாதுரியத்தையும், சமயோசிதத்தையும் அன்வார் மீண்டும் ஒருமுறை நிரூபித்து அரசியல் ரீதியாக பலன் கண்டுள்ளார்.

-இரா.முத்தரசன்