கோலசிலாங்கூர், மே 2-மாநில, தொகுதி, கிளை அளவில் மஇகாவின் சட்ட திட்டங்களை விரைவில்மாற்றியமைக்கப் போவதாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்நேற்று அறிவித்துள்ளார்.
65 உறுப்பினர்கள் இருந்தால் ஒரு கிளையை அமைத்துவிடலாம் என்ற நிலைதற்போது உள்ளது.
இந்த முறை மாற்றியமைக்கப்பட்டு இனி வரும் காலங்களில் 100 முதல் 300 பேர் வரையில் ஒரு கிளையில் உறுப்பினர்களாக இருந்தால்தான் ஒரு மஇகா கிளை அமைக்க முடியும் என சட்டத் திருத்தம்செய்வதற்கு மஇகா வழக்கறிஞர்கள் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்..
தற்போது 1,110 கிளைகளுடன் 120,000 உறுப்பினர்கள் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளனர்என்றும் இனி தொகுதித் தேர்தல்களில் 22 செயலவை உறுப்பினர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்புவழங்கப்படும் என்றும் பழனிவேல் தெரிவித்தார்.
புத்ரி, புத்ரா பகுதித் தலைவர்களின் வயது 35 ஆக நிலை நிறுத்தப்படும். புத்ரா-புத்ரி உறுப்பினர்களின் வயது 18லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும்தெரிவித்தார்.
மாநில அளவில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வண்ணம் சட்டத் திருத்தங்கள் கொண்டுவர தான் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே பல தருணங்களில் பழனிவேல் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஇகா சட்டவிதிகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமானால், அவை கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு, பேராளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
அதற்கு முன்பாக கட்சியின் மத்திய செயலவையில் சட்டதிருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.