ஐதராபாத், மே 6 – ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் உள்ள 25 நாடாளுமன்ற, 175 சட்டப் பேரவை தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
இந்த தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 3.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஆந்திராவின் தெலங்கானா பகுதியில் உள்ள 17 மக்களவை, 119 சட்டப் பேரவை தொகுதிகளில் பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது.
சீமாந்திரா பகுதியில் நாளையதினம் தேர்தல் நடைபெற உள்ளது. சீமாந்திரா பகுதியில் உள்ள 25 நாடாளுமன்ற, 175 சட்டப் பேரவை தொகுதிகளில் நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் கடந்த வாரம் தெலுங்குதேசம் – பா.ஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சீமாந்திரா பகுதியில் 6 பொதுக் கூட்டங்களில் பேசினர்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.ரகுவீர ரெட்டி, மத்திய அமைச்சர்கள் சிரஞ்சீவி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.