Home இந்தியா பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்

434
0
SHARE
Ad

Chennai_Police_logoசென்னை, மே 8 – பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்து மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசியத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜாகீர் உசேன் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் தன்னை சென்னைக்கு உளவு பார்க்க அனுப்பியதாக ஜாகீர் உசேன் தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அவரை ரகசிய இடத்தில் வைத்து கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், ஜாகீர் உசேன் மேலும் சில ரகசியத் தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தமிழகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்துவார்கள்.

இலங்கையில் தங்கி இருந்து கொண்டு கடல் வழியாக ஊடுருவி வந்து தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்.

தீவிரவாதிகளின் முதல் இலக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம். அடுத்த இலக்கு பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதுபோல அடுத்தடுத்து தமிழகத்தின் பல இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த தாக்குதல், செப்டம்பரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

விநாயகர்சதுர்த்தி, ஆகஸ்டு–15 சுதந்திர தினவிழா அல்லது டிசம்பர்–6 ஆம் தேதி பாபர்மசூதி இடிப்பு தினம் ஆகிய நாட்களில் இந்த தாக்குதல்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளதாக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாகீர் உசேனைப் போல மேலும் 2 உளவாளிகள் சென்னை நகருக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அந்த உளவாளிகள் இருவரும் போலி கடப்பிதழ் மூலம் வந்திருக்கலாம் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஜாகீர் உசேனிடம், கியூ பிரிவு போலீசாரும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நடத்திய விசாரணையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த மே 1 ஆம் தேதி அன்று நடந்த ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று அவன் மறுத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

தனக்கு கொடுக்கப்பட்ட வேலை சென்னை அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்புவதுதான் என்றும் ஜாகீர் உசேன் உறுதியாக கூறிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.