ஒட்டாவா, மே 8 – கனடா நாடாளுமன்றத்தில் மே 18 இலங்கை இறுதிகட்ட போர் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிகட்ட போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
ஐ.நா.சபை விசாரணை கட்டமைப்பின் படி சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இறுதிக்கட்ட போரில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 18–m தேதி நினைவு தினம், ஈழ ஆதரவாளர்களால் பல்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றத்தில் மே 18 நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாட்டை கனடா மனித உரிமை மையம் செய்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்கும். எனவே இக்கூட்டம் வருகிற 14–ந்தேதி மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை நடத்தப்படுகிறது. இதில் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
மேலும், இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கனடா வாழ் தமிழர்களுக்கும், மனித உரிமை மையம் அழைப்பு அனுப்பியுள்ளது. கனடாவில் உள்ள இதர தமிழ் அமைப்புகளும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.