கொழும்பு, மே 8 – இந்தியா-இலங்கைக்கு இடையே சிவில் அணுசக்தி துறையில் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் கடந்த 2 நாட்களாக நடந்தது.
இதில், இந்திய தரப்பில் அணு ஆயுத குறைப்பு இணைச் செயலாளர் அமன்தீப் கில் தலைமையில் வெளியுறவுத்துறை மற்றும் அணுசக்தி துறையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல், இலங்கை தரப்பில் அந்நாட்டின் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி துறை செயலாளர் விஜயதிலகே தலைமையில் அணுசக்தி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமாகவும், நட்புரீதியான சூழலில் நடந்ததாகவும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.