Home இந்தியா பிஜேபி கட்சியின் எதிர்ப்புக்கிடையில் ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்திற்கு இந்தியாவில் அனுமதி

பிஜேபி கட்சியின் எதிர்ப்புக்கிடையில் ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்திற்கு இந்தியாவில் அனுமதி

529
0
SHARE
Ad

Air Asia logo 440 x 215கோலாலம்பூர், மே 9 – பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் காலத்தில் நடப்பு பராமரிப்பு காங்கிரஸ் அரசாங்கம் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) கடும் கண்டனம் தெரிவித்துள்ள வேளையில்,

இந்தியாவின் பொது விமான போக்குவரத்து தலைமை இயக்குநர் விமானச் சேவைக்கான அனுமதியை மே 7 ஆம் தேதி ஏர்ஆசியா இந்தியா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

மலேசிய பங்கு பரிவர்த்தனை சந்தையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ஏர் ஆசியா இதனைத் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

டாட்டா குழுமம், டெலிஸ்ட்ரா ட்ரேட்பிளேஸ் (Telestra Tradeplace)
ஆகியவற்றுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட தனது கூட்டு நிறுவனமான ஏர் ஆசியா இந்தியா மூலம் இந்தியாவில் உள்நாட்டு வர்த்தக விமானச் சேவையை மேற்கொள்ள இந்த அனுமதி இடமளிக்கின்றது என ஏர்ஆசியா குறிப்பிட்டது.

டெலிஸ்ட்ரா நிறுவனம் பிரபல இந்திய வணிகர் அருண் பாட்டியாவின் நிறுவனமாகும்.

இருப்பினும் இந்த அனுமதி இந்திய நீதிமன்றங்களின் இறுதி ஒப்புதலுக்குப் பின்னரே செயல் வடிவம் பெறும் என்ற கட்டுப்பாட்டையும் இந்தியாவின் பொது விமான சேவை இலாகாவின் தலைவர் பிரபாட் குமார் தெரிவித்திருக்கின்றார்.

டோனி பெர்ணான்டசின் மகிழ்ச்சி கலந்த ட்விட்டர் செய்தி

tony-fernandes-airasia-300x196ஏர் ஆசியா இந்தியாவின் அனுமதியை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த ஏர் ஆசியாவின் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்ணான்டஸ் “நாம் சரித்திரம் படைத்திருக்கின்றோம். ஏர் ஆசியாவுக்கு எதுவும் சுலபமாக கிடைத்ததில்லை. கடும் போராட்டத்திற்குப் பின்னர் இதைப் பெற்றிருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கு சுப்ரமணியன் சுவாமி கடும் கண்டனம்

subramaniam-swamyஇதற்கிடையில், ஏர் ஆசியா நிறுவனத்திற்கு விதிமுறைகள் மீறப்பட்டு அனுமதி வழங்கப்படுகின்றது என ஏற்கனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள பிஜேபி கட்சியின் உதவித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி இந்த அனுமதிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

நாட்டின் சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் புறம்பாக இந்த அனுமதி பெறப்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி சாடியிருக்கின்றார்.

“இந்த விவகாரம் ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தின் பார்வையிலும், உயர் நீதிமன்றத்தில் வழக்காகவும் இருந்து வருகின்றது. முக்கிய வணிக முடிவுகளை அரசாங்கம் எடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் தேர்தல் ஆணையம் விதித்திருக்கின்றது. இந்நிலையில், அவசரம் அவசரமாக ஏன் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏர் ஆசியாவால் இந்திய விமான சேவையில் புரட்சிகரமான மாற்றம்

80கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட முதலீட்டுடன் தொடங்கப்படும் இந்த திட்டம் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளின் தரத்தையும் விரிவாக்கத்தையும் பெருமளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், பிஜேபி அரசாங்கம் அமைக்கப்படும் சாத்தியம் இருப்பதால், ஏர் ஆசியா நிறுவனம் தொடர்ந்து அடுத்து வரும் புதிய அரசாங்கத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தி தாங்கள் பெற்றுள்ள அனுமதியை மறு உறுதிப்படுத்த வேண்டியிருக்கும் என இந்த விவகாரத்தைக் கண்காணித்து வரும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதனால்தானோ என்னவோ, ஏர் ஆசியா அனுமதி பற்றி மலேசிய பங்கு சந்தையில் அறிவிப்பு செய்யப்பட்டும் ஏர் ஆசியா பங்குகளின் விலைகளும் உயரவில்லை.