புதுடெல்லி, மே 9 – 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் வாக்குமூலம் டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட 4 பேர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தங்கள் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர். நேற்று கனிமொழி தனது வாக்குமூலத்தை நீதிபதி ஓ.பி.சைனி முன்பு பதிவு செய்தார். அவரிடம் அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமான பதிலை தாக்கல் செய்தார். அதில் கனிமொழி கூறியிருப்பதாவது,
கலைஞர் டி.வி. தொடங்கப்பட்ட காலத்தில் 2007–ஆம் ஆண்டு ஜூன் 6–ஆம் தேதி முதல் 20–ஆம் தேதி வரை 2 வாரங்களுக்கு மட்டுமே அந்த நிறுவனத்தின் இயக்குனராக இருந்தேன்.
20.06.2007 அன்று கலைஞர் டி.வி. இயக்குனர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். அதன்பிறகு அந்த நிறுவனத்தின் எந்தவொரு செயல்பாட்டிலும் நான் தலையிட்டதில்லை. கலந்து கொண்டதும் கிடையாது. விலகிய பின்னர் அந்த நிறுவனத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
அந்த தொலைக்காட்சியின் அன்றாட நடவடிக்கையும் எனக்கு தெரியாது. இந்த வழக்கில் எனக்கு எதிராக சில சாட்சிகளை வெவ்வேறு நோக்கம் காரணமாக சி.பி.ஐ. சேர்த்துள்ளது.
நான் கலைஞர் தொலைக்காட்சியின் பொறுப்பில் இருந்து விலகி 18 மாதங்கள் கடந்த பிறகுதான் சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ள கலைஞர் தொலைக்காட்சியில் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது.
இந்த பண பரிவர்த்தனை நடைபெற்ற 2008–ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2011–ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நான் எந்த வகையிலும் கலைஞர் தொலைக்காட்சியுடன் தொடர்பில் இருந்தது கிடையாது.
கலைஞர் தொலைக்காட்சியின் எந்த இயக்குனர் கூட்டத்திலும் நான் பங்கேற்றது இல்லை. எந்த ஆவணத்திலும் கையெழுத்து போட்டது இல்லை. என்றாலும் என்னை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்ந்துள்ளது.
என் மீது தவறான வழக்கு போடப்பட்டு சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு நெருக்கடி இருந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என வாக்குமூலத்தில் கனிமொழி தெரிவித்துள்ளார்.