மே 9 – உலகில் சிறந்த கல்வியை வழங்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் நான்கு இடங்களையும் ஆசிய நாடுகளே பெற்றுள்ளன. தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய நாடுகளே இந்தத் தரவரிசையில் முதல் இடங்களைப் பிடித்த நாடுகளாகும்.
கல்வி மற்றும் பிரசுர நிறுவனமான பியர்சன் நிறுவனம் சர்வதேச நாடுகளில் வழங்கப்படும் உயர் கல்வி, சர்வதேச ரீதியிலான பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நான்காவது தவையாக நடத்தப்பட்ட இந்தத் தரவரிசை ஆய்வில் 40 நாடுகளின் பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐந்தாவது இடத்தை ஐரோப்பிய நாடான பின்லாந்து பெற்றுள்ளது. பிரிட்டனுக்கு ஆறாவது இடமும் ஐக்கிய அமெரிக்காவுக்கு 14 ஆவது இடமும் கிடைத்துள்ளன. இதேசமயம் இத்தரவரிசைப் பட்டியலில் மலேசியா,இலங்கை, இந்திய நாடுகளுக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.