வாரணாசி, மே 12 – இறுதிகட்ட தேர்தலை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் தொதியான வாரணாசியில், 45 ஆயிரம் காவல் வீரர்கள் துப்பாக்கியுடன் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் இறுதி கட்டமாக 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்கு பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். பா.ஜ.வினர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்காணிக்க வாரணாசியில் 250 ரகிசய கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இங்கு போலீஸ் மற்றும் துணை ராணுவபடைகளைச் சேர்ந்த 45 ஆயிரம் பேர் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள 1,562 வாக்குச் சாவடியிலும் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
கலவர அபாயம் உள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பிரச்சார பணியில் ஈடுபட்ட வெளியூர் நபர்கள் வாரணாசியை விட்டு வெளியேறும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வாரணாசியில் போதுமான அளவில் பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர வாரணாசி தேர்தல் அதிகாரி பிரஞ்சால் யாதவ், சிறப்பு தேர்தல் பார்வையாளர் பிரவீன் குமார் ஆகியோர் பல இடங்களுக்கு சென்று தேர்தல் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.