சென்னை, மே 12 – ஒரு படத்தில் நடித்து, அந்தப் படம் வெளியான பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பது என்ற வழக்கத்தை பல வருடங்களாக பின்பற்றி வருபவர் ரஜினி. 1975-ல் அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகமாகி, பிறகு வில்லனாக நடித்து வந்த ரஜினி அடுத்தடுத்த வருடங்களிலேயே கதாநாயகனாக உயர்ந்தார்.
கதாநாயகனாக அவர் நடித்த காலக்கட்டத்தில் 1977 மற்றும் 1978 ஆம் வருடங்களில் அதிகபட்சமாக ஒரு வருடத்துக்கு 18 படங்கள் நடித்தவர்தான் ரஜினி. அதே ரஜினி 1990-களின் பிற்பகுதியில் பட எண்ணிக்கையைக் குறைத்தார்.
2000-அம் வருடங்களுக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கு ஒரு படம், மூன்று வருடங்களுக்கு ஒரு படம் என பெரிய இடைவெளி கொடுக்க ஆரம்பித்தார். அப்படிப்பட்ட ரஜினியிடம் இப்போது அதிரடி மாற்றம். கோச்சடையான் படம் வெளியாவதற்கு முன்பே லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அது மட்டுமல்ல, லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்தப்படத்திலும் நடிக்க இருக்கிறாராம். ஐ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் ஷங்கர்தான் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்குகிறார். கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். ரஜினியின் இந்த புதிய முடிவின்படி வருடத்துக்கு மூன்று படங்கள் நடிக்க இருக்கிறாராம்.