Home நாடு திரெங்கானுவில் அரசாங்கம் கலைக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படுமா?

திரெங்கானுவில் அரசாங்கம் கலைக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படுமா?

507
0
SHARE
Ad

terengganu flagகோல திரெங்கானு, மே 13 – திரெங்கானுவில் 3 அம்னோ பிரதிநிதிகள் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசாங்கத்தை கலைத்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அம்மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மந்திரி பெசார் அகமட் ராசிப் ரஹ்மான் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இனி தேசிய முன்னணியால் முறையாக ஆட்சி நடத்த இயலாது என்றும் அரசியல் பார்வையாளர்களுள் ஒருவரான அப்துல் அசிஸ் பாரி கூறியுள்ளார்.

“தற்போது முடிவெடுக்கும் அதிகாரம் சுல்தானின் கையில் இருப்பதால் அவர் ஆட்சியில் பெரும்பான்மை அணியை நியமிக்க வேண்டும் அல்லது அரசாங்கத்தை கலைக்க வேண்டும். என் கருத்துப்படி மாநில அரசாங்கத்தை கலைப்பது தான் நல்லது” என்று அசிஸ் மலேசியாகினி செய்தி இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

திரெங்கானு மாநிலம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நிலையற்றதாக உள்ளது. இதற்கு ஒரு முடிவு கட்ட சுல்தான் இந்த முறை தங்களுக்கு எந்த அரசாங்கம் தேவையோ அதை மக்களே முடிவு செய்ய வழி வகை செய்ய வேண்டும் என்றும் அசிஸ் கூறியுள்ளார்.

நேற்று, அகமட் சாயிட் திரெங்கானு மந்திரி பெசார் பதவியை திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் 14 -வது புதிய மந்திரி பெசாராக அகமட் ராசிப் பதவி ஏற்றார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை அகமட் சாயிட் அம்னோவில் இருந்து விலகி தன்னை சுயேட்சை வேட்பாளராக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு அம்னோ பிரதிநிதிகள் கட்சியில் இருந்து விலகினார்.

இதனால் திரெங்கானுவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட தேசிய முன்னணி, 14 ஆக குறைந்து சிறுபான்மை அரசாங்கமாக உருவாகியுள்ளது. பக்காத்தான் அம்மாநிலத்தில் தற்போது 15 சட்டமன்ற உறுப்பினர்களோடு பெரும்பான்மை வகிப்பது குறிப்பிடத்தக்கது.