கோல திரெங்கானு, மே 13 – திரெங்கானு மாநிலத்தில் இன்று முன்னாள் மந்திரி பெசார் அகமட் சாயிட் உட்பட மூன்று அம்னோ பிரதிநிதிகள் தங்களது சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதன் மூலம் திரெங்கானு மாநிலத்தில் தேசிய முன்னணி சிறுபான்மை அணியாக உருவாகியுள்ளது.
அகமட் சாயிட் விலகியவுடன் மத்திய செயற்குழு உறுப்பினர் கஸாலி தாயிப்பும் அம்னோவில் இருந்து விலகினார்.
அவரைத் தொடர்ந்து மூன்றாவதாக புக்கிட் பேசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி தாவுத்தும் தற்போது அம்னோவில் இருந்து விலகியுள்ளார்.
அகமட் சாயிட்டும், கஸாலியும் தங்களை சுயேட்சை வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர்.
நேற்று அகமது பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய திரெங்கானு மந்திரி பெசாராக டத்தோ அகமது ரசிவ் அப்துல் ரஹ்மான் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் திரெங்கானு மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்டம் கண்டுள்ளது. இன்னும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக இருப்பதாக ஆரூடங்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில் பாஸ் கட்சி இந்த திடீர் பெரும்பான்மை குறித்து கலந்தாலோசிக்க பக்காத்தான் கூட்டணியுடன் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.