புதுடில்லி, மே 13 – இந்தியாவில் நடந்து முடிந்திருக்கும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
கடந்த சில பொதுத் தேர்தல்களோடு ஒப்பிடும்போது முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, இவ்வளவு தெளிவான, ஒருமுகமான கருத்துக் கணிப்புகள் வெளியாவது இதுதான் முதல் முறையாகும்.
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த 9 கட்ட தேர்தலிலும் ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை தகவல் ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
இந்த கருத்து கணிப்புகளின் மூலம் பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
‘சி ஒட்டர்’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், மொத்தம் உள்ள 543 இடங்களில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 289 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும், பிற கட்சிகளுக்கு 153 இடங்களும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘டைம்ஸ் நவ்’ (Times Now) தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 249 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 148 இடங்களும், பிற கட்சிகளுக்கு 146 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்து உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா 52 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கருத்து கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.
தென் இந்திய மாநிலங்கள்
கர்நாடகத்தில் 18 இடங்கள் பாரதீய ஜனதாவுக்கும், 9 இடங்கள் காங்கிரசுக்கும், ஒரு இடம் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கும் கிடைக்கும் என்றும்,
கேரளாவில் காங்கிரசுக்கு 16 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரி முன்னணிக்கு தலா இரு இடங்களும் கிடைக்கும் எனவும்
‘டைம்ஸ் நவ்’ கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
ஆந்திராவில் சீமாந்திரா பகுதியில் பாரதீய ஜனதா–தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 17 இடங்களும்,
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு 8 இடங்களும், தெலுங்கானா பகுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 9 இடங்களும்,
காங்கிரசுக்கு 4 இடங்களும் பாரதீய ஜனதா, இடதுசாரிகளுக்கு தலா இரு இடங்களும் கிடைக்கும் என்றும்
‘டைம்ஸ் நவ்’ கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.என்.என்.–ஐ.பி.என்.
‘இந்தியா டுடே’ சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 261 முதல் 283 இடங்களும்,
காங்கிரஸ் கூட்டணிக்கு 110 முதல் 120 இடங்களும், பிற கட்சிகளுக்கு 150 முதல் 162 இடங்களும் கிடைக்கும் என்றும்,
இதில் பாரதீய ஜனதாவுக்கு மட்டும் 230 முதல் 242 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.என்.என்.–ஐ.பி.என். (CNN-IBN) சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 270 முதல் 282 இடங்கள் வரையும், காங்கிரஸ் கூட்டணிக்கு 92 முதல் 102 இடங்கள் கிடைக்கும் என்றும், இதில் காங்கிரசுக்கு மட்டும் 72 முதல் 82 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரியவந்து உள்ளது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கு அதிக இடங்கள்
‘தந்தி’ தொலைக்காட்சியின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், அ.தி.மு.க.வுக்கு 29 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 5 இடங்களும், பாரதீய ஜனதா கூட்டணிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என தெரிகிறது.
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி சார்பில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அ.தி.மு.க.வுக்கு 31 இடங்களும், தி.மு.க.வுக்கு 7 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்தியா டுடே’ நடத்திய கருத்து கணிப்பில் அ.தி.மு.க.வுக்கு 20 முதல் 24 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 10 முதல் 14 இடங்களும், பாரதீய ஜனதா கூட்டணிக்கு 2 முதல் 4 இடங்களும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சி ஓட்டர்’ சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அ.தி.மு.க.வுக்கு 27 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 6 இடங்களும், பாரதீய ஜனதா கூட்டணிக்கு 5 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்கும் எனத் தெரிகின்றது.
ஆக, தமிழ் நாட்டிலும் அகில இந்திய அளவிலும் இந்த முறை கருத்துக் கணிப்புகள் ஒரு மனதாக – ஒரே கண்ணோட்டத்தோடு வெளியாகி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.