சென்னை, மே 15 – தேர்தலுக்குப்பிறகு யாருக்கு ஆதரவு என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் முடிவுக்குப் பிறகு பேசுகிறேன் என்று சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தபிறகு கடந்த 27-ஆம் தேதியன்று கொடநாடு சென்ற அவர், அங்கிருந்தபடி அலுவல்களை கவனித்து வந்தார். இந்நிலையில், அங்கிருந்து புதன்கிழமை பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னைக்கு 3.30 மணி அளவில் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்று பூங்கொத்து கொடுத்தனர்.
பல்வேறு கருத்துக் கணிப்புகளில், தமிழகத்தில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை பாஜக தலைவர்கள் சந்திக்கக்கூடும் என்ற தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய அவரிடம் பேட்டி காண நிருபர்கள் குவிந்திருந்தனர்.
அப்போது, அவர் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிவதற்காக, நாட்டு மக்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். யாருடனாவது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமையுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு அது பற்றி பேசுகிறேன் என ஜெயலலிதா கூறினார்.