Home இந்தியா காங்கிரஸ் அரசின் கடைசி நாளில் விடுதலைப் புலிகளுக்கு 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

காங்கிரஸ் அரசின் கடைசி நாளில் விடுதலைப் புலிகளுக்கு 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

644
0
SHARE
Ad

LTTE 440 x 215புதுடில்லி, மே 16 – ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எப்போதுமே பகைமை பாராட்டி வந்துள்ள காங்கிரஸ் அரசாங்கம், பதவி விலகிச் செல்லும் இறுதி நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுவரை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாள் முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தடை உத்தரவு மறு ஆய்வு செய்யப்படுகிறது என்ற பேரில் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது.

#TamilSchoolmychoice

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடனான கடுமையான போக்கினால் தமிழ் நாட்டில் தனது செல்வாக்கை இழந்துள்ள காங்கிரஸ் கட்சி படுமோசமாக தோல்வியுறும் என வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதற்காக, தமிழ் நாட்டு மக்களை பழிவாங்கும் செயலாக – அடுத்து அரசாங்கம் அமைக்கப் போகும் பாஜக அரசாங்கத்திற்கு கூடுதல் தலைவலியைக் கொடுக்கும் வண்ணம் – இந்த தடை நீடிப்பு முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது.

புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் மத்திய அரசிடம் எப்போதும் கோரிக்கை வைத்தும் வருகின்றன. வைகோ போன்றவர்கள் எப்போதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தும் வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சகம் ஒரேயடியாக 5 ஆண்டுகாலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது,

ஆட்சி மாறும் போதும் புலிகள் மீதான வன்மத்தை காங்கிரஸ் அரசு கைவிடுவதாக இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.

அடுத்த ஆட்சி அமைக்கும் பாஜக அரசு இந்த முடிவை மாற்றலாம் என்றாலும், அது மேலும் அரசியல் சர்ச்சைகளை உருவாக்கலாம் என்பதால் அவர்கள் தயங்கக் கூடும்.

இந்த முடிவினால், தாங்கள் ஆட்சியில் இருக்கும் ஐந்தாண்டுகளிலும் தொடர்ந்து தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பிரச்சனையில் பாஜக அரசாங்கம் சிக்கித் தவிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கமாகும்.