புதுடில்லி, மே 16 – இன்று வெள்ளிக்கிழமை இந்தியப் பொதுத் தேர்தல் வெளியாகிக் கொண்டு இருப்பதால் ஒட்டு மொத்த இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்திய மக்களும் தொலைக்காட்சியின் முன்னாள் ஐக்கியமாகியிருப்பார்கள் என்பதால் இந்திய செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் விளம்பரக் கட்டணங்களை 20 மடங்காக அதிகரித்துள்ளன.
10 விநாடிகளுக்கான ஒரு விளம்பரத்திற்கு ஏறத்தாழ 10 ஆயிரம் ரூபாய் (மலேசிய வெள்ளி 550) கட்டணமாக விதிக்கப்பட்ட நிலைமை மாறி இன்று அதே 10 விநாடி விளம்பரத்திற்கு 2 லட்சம் ரூபாய் (மலேசிய வெள்ளி 11,000)கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தொலைக்காட்சிகளில் விளம்பரங்களை பொறுத்தவரை கிரிக்கெட் போட்டிகள் அதிகளவில் விளம்பர வருமானத்தை ஈட்டிதத் தரும் நிகழ்வுகளாக இருந்தன.
அதற்கடுத்தபடியாக இப்போது தேர்தல் முடிவுகளின் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது 10 விநாடி விளம்பரத்திற்கு 5 லட்சம் ரூபாய் (மலேசிய வெள்ளி 27,500) விளம்பர கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகும் இந்தியத் தொலைக்காட்சிகளான டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டுடெ, என்டிடிவி 7,ஐபின், சிஎன்என், நியூஸ்எக்ஸ் ஆகிய தொலைக்காட்சிகள் தொடர்ந்து தங்களின் அரசியல் செய்திகளினாலும் விவாதங்களினாலும் முக்கியத் தலைவர்களின் விவாத மேடைகளினாலும் முன்னணி வகிக்கின்றன.