சிரம்பான், மே 21 – வழிப்பறி கொள்ளையன் ஒருவனால் தலைக்கவசம் கொண்டு கடுமையாகத் தாக்கப்பட்டு, சிரம்பான் மருத்துவமனையில் கடந்த 6 நாட்கள் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கன்னியாஸ்திரி ஜூலியானா லிம் ,சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
கடந்த மே 14 ஆம் தேதி, காலை 6 மணியளவில், பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு தனது சக கன்னியாஸ்திரியான மேரி ரோஸிடெங்குடன் சென்று கொண்டிருக்கையில், அங்கு மோட்டாரில் வந்த கொள்ளையன் ஒருவன் அவர்கள் இருவரையும் தனது தலைக்கவசத்தால் தாக்கி கைப்பையை பிடுங்கிச் சென்றுள்ளான்.
இதில் கடுமையான காயங்களுக்கு உள்ளான இருவரும் தேவாலயத்திற்கு முன்பு மயங்கி விழுந்து கிடந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் சிரம்பான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் கன்னியாஸ்திரி ஜூலியானா லிம் சுயநினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார்.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சம்வத்தின் போது அவர்கள் இருவரும் வைத்திருந்த கைப்பையில் சில ரிங்கிட்கள் மற்றும் பைபிள் மட்டுமே இருந்துள்ளது. அதை கொள்ளையடிக்கும் முயற்சியில், அனாவசியமாக ஓர் புனித ஆன்மா பலியாகிவிட்டது.
மலேசியாவில் இது போன்ற வழிபறி கொள்ளை சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல. இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் காவல்துறை அதை தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனப்போக்கை காட்டுவது ஏனோ?