கோலாலம்பூர், மே 22 – நேற்று தனது ட்விட்டர் அகப்பக்கத்தில் – மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு போதிய ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றது என குற்றஞ்சாட்டியிருந்த டோனி பெர்னாண்டஸுக்கு அந்த நிறுவனம் பதில் கொடுத்துள்ளது.
ஏர்ஆசியாவின் கீழ்நிலை அதிகாரிகள் பெர்னாண்டஸுக்கு போதிய விளக்கத்தை தரவில்லை என்று தாங்கள் கருதுவதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் கூறியது.
ஏர் ஆசியாவுக்கு உதவிகள் வழங்கியிருக்கின்றோம்
பல தருணங்களில் ஏர் ஆசியா மனித ஆற்றல் பற்றாக்குறையை தனது செயல்பாடுகளில் எதிர்நோக்கிய போது மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் தான் தனது சொந்த ஊழியர்களை அவர்களுக்கு உதவி செய்ய அனுப்பியது என்றும் அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியது.
இரண்டாவது விமான நிலையம் திறக்கப்பட்ட சில நாட்களில் ஏர்ஆசியா சந்தித்த பல நெருக்கடிகளை தணிக்க மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் உதவி செய்துள்ளது என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கை கூறியது.
மேலும் முதல் நாள் அமலாக்கத்தின் போது ஏர் ஆசியா இரண்டாவது விமான நிலையத்தில் சந்தித்த பிரச்சினைகளை சமாளிக்கவும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் உதவி புரிந்தது என்றும் அந்நிறுவன அறிக்கை தெரிவித்தது.
ஏர் ஆசியாவின் வணிக முத்திரை சுவரொட்டிகள், பதாகைகள் குறித்து விளக்கமளித்த மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் இதற்காக வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏர்ஆசியாவுக்கு பல முனைகளில் ஏற்படுத்தி தந்துள்ளதாக கூறியது.
தனியான பயண முகப்பிட இயந்திரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், தாங்கள் ஏற்கெனவே 200க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் உத்ரவாதமும் பாதுகாப்பும் நிறைந்த பயண முகப்பிட மென்பொருளுடன் கூடிய இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் இதனால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்காமல் தங்களின் பயணங்களை தொடர முடியும் என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் ஏர்ஆசியாவுக்கு பதில் அறிக்கையாக கூறியுள்ளது.