கோலாலம்பூர், மே 22 – கடந்த வருடம் மர்ம நபர்களால் சுடப்பட்டு கிட்டத்தட்ட சாவை நெருங்கி, பின்னர் தீவிர சிகிச்சையின் விளைவால் உயிர் பிழைத்துள்ள ‘மை வாட்ச்’ அமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவன் நேற்று மீண்டும் செய்தியாளர்கள் முன் தோன்றினார்.
மாநில காவல்துறை தலைவர் ஒருவரின் வேலையில்லாத மகனுக்கு இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்து சஞ்சீவன் கேள்வி எழுப்பினார்.
வேலை எதுவும் இன்றி இருக்கும் அந்த அதிகாரியின் 30 வயது மகன், விலையுயர்ந்த ஆடம்பரமான ஜாகுவார் மற்றும் ஆடி 5 வகை கார்கள் வைத்திருப்பது எப்படி என்றும், கடந்த 6 மாதங்களில் மட்டும் அவரது வங்கிக் கணக்கில் சுமார் 500,000 ரிங்கிட் பறிமாற்றம் நடந்திருப்பது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.
“அந்த குடும்பத்தில் அவர் ஒரே மகன் தான். அதுவும் வேலையில்லாதவர். அவருக்கு நேர்மையான வழியில் வருமானம் வருவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. அதுமட்டுமின்றி அவரது தந்தை காவல்துறைத் தலைவராக உள்ள அதே மாநிலத்தில் செயல்படும் ஆயுதங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திலும் அவருக்கு தொடர்பு உள்ளது” என்று கோலாலம்பூரிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று செய்தியாளர்களுக்கு சஞ்சீவன் பேட்டியளித்தார்.
சட்டத்துறை பட்டதாரியான அந்த அதிகாரியின் மகன், கடந்த 2008 -ம் ஆண்டு முதல் வேலையில்லாமல் இருக்கிறார் என்பதை வேலை பதிவு இலாகாவின் பதிவு காட்டுவதாகவும் சஞ்சீவன் குறிப்பிட்டார்.