பிப்ரவரி 16 – நாளை ஞாயிற்றுக்கிழமை “டோங் சோங்” எனப்படும் மிகவும் செல்வாக்கு பெற்ற சீனக் கல்வி அமைப்பு காஜாங் நகரில் ஏற்பாடு செய்திருக்கும் சீனப் புத்தாண்டு விருந்துபசரிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் பிரதமர் நஜிப்பும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் அரிய காட்சி நிகழுமா என்ற பரபரப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இருவருமே இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரே நேரத்தில் வருவார்களா, ஒரே மேடையில் தோன்றுவார்களா அல்லது வேறு வேறு நேரங்களில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை.
இது குறித்து கருத்துரைத்த அன்வார் “நஜிப்பை சந்திப்பதில் எனக்கொன்றும் பிரச்சனையில்லை. எனது போராட்டம் தனிப்பட்ட முறையிலானது அல்ல. எனவே, நான் நஜிப்புடன் தனிப்பட்ட முறையில் சண்டை போடப் போவதில்லை” என்று கூறினார்.
2008க்குப் பிறகு இந்த இரு தலைவர்களும் நாடாளுமன்ற அவைக்கு வெளியே இதுவரை நேரடியாக சந்தித்துக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில தருணங்களில் நாடாளுமன்ற அவைக்குள் இருவரும் சந்தித்துள்ளனர் (படம்).
அதனால்தான் நாளை நடைபெறப்போகும் சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருவருக்குமே இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் இந்த தருணத்தைப் பயன்படுத்தி இருவருமே உணர்ச்சிகரமான ஆக்ரோஷமான உரைகளை வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் நஜிப் சீனக் கல்வி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சீனக்கல்வி குறித்து தாங்கள் எடுக்கப் போகும் முடிவுகள் குறித்து அன்வார் இப்ராகிம் சில அறிவிப்புக்களை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.