பிரபல வணிக சஞ்சிகையான “மலேசியன் பிசினஸ்” மலேசியாவின் முதல் 40 பெரிய பணக்காரர்களை வரிசைப்படுத்தியுள்ளது. அந்த வரிசையின் படி ஆனந்த கிருஷ்ணன் தொடர்ந்து தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
மூன்றாவது இடத்தை பப்ளிக் வங்கி உரிமையாளர் டான்ஸ்ரீ தெ ஹோங் பியோவ் பிடித்துள்ளார்.
ரோபர்ட் குவோக்கின் சொத்து மதிப்பு 46.1 பில்லியன் ரிங்கிட்டாக கணக்கிடப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் அவர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றார்.
ஆனந்த கிருஷ்ணன் 32.9 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய சொத்துக்களைக் கொண்டுள்ளார். 2004ஆம் ஆண்டு முதல் இரண்டாவது மிகப் பெரிய மலேசியப் பணக்காரராக இருந்து வரும் ஆனந்தகிருஷணனின் சொத்து மதிப்பு அண்மையக் காலத்தில் 23.5 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தாலும் அவர் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகின்றார்.
பிப்ரவரி 16 தேதியிட்ட தனது இதழில் மலேசியன் பிசினஸ் பத்திரிக்கை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஹோங் லியோங் குழுமத்தின் உரிமையாளரான டான்ஸ்ரீ குவெக் லெங் சான் இந்த முறை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மிகப் பெரிய அரசாங்க குத்தகைகளைப் பெற்று வரும் டான்ஸ்ரீ சைட் மொக்தார் அல்புக்காரி பணக்காரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கெந்திங் குழுமத்தின் உரிமையாளர்களான டான்ஸ்ரீ லிம் கோக் தே ஏழாவது இடத்தையும் அவரது தாயார் புவான்ஸ்ரீ லீ கிம் ஹூவா எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
வரிசைப்படுத்தப்பட்டுள்ள 40 பணக்காரர்களும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அவர்களின் நிறுவனங்களின் பங்கு விலைகளை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
-பெர்னாமா