நியூ டெல்லி, மே 23 – உலக அளவில் இணைய வர்த்தகத்தில் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவின் ‘அமேசான்’ (Amazon) நிறுவனம், இந்தியச் சந்தைகளில், கடந்த 2013-ம் ஆண்டு நுழைந்தது. அதன் வரவால் மற்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் சற்றே கலக்கம் அடைந்துள்ளன. இதன் காரணமாக இந்திய சந்தைகளில் தங்களது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள பல நடவடிக்கைகளையும், வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
இந்திய அளவில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான ப்ளிப்கார்ட்(Flipkart), தற்போது தனது முக்கிய போட்டியாளராகத் திகழ்ந்த மிந்திரா (Myntra) நிறுவனத்தை இந்திய மதிப்பில் சுமார் 2,000 கோடி ரூபாய்களுக்கு வாங்கியுள்ளது.
இந்த இரண்டு தளங்களுக்கும் இணைய வர்த்தகத்தில் கடுமையான போட்டி நிலவி வந்தது. இதனால் ப்ளிப்கார்ட் இந்த தளத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், இந்த வர்த்தகத்தின் மூலம், மிந்திரா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட்டுடன் இணைவார்கள் எனக் கருதப்படுகின்றது. இதன் காரணமாக அமெரிக்க நிறுவனமான அமேசான், இந்தியாவில் வர்த்தக இழப்பை சந்திக்க நேரிடலாம்.
இந்திய இணையச் சந்தைகளில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான இந்த மோதலில், தற்சமயம் ப்ளிப்கார்ட்டின் கையே ஓங்கியுள்ளது.