பாக்ராம், மே 26 – அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென்று ராணுவ வீரர்களுடன் விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானம் வாஷிங்டனில் இருந்து இரவில் புறப்பட்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்ராமில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்துக்கு சென்றடைந்தது.
ஒபாமாவின் இந்த பயணம் குறித்து முன்கூட்டி வெள்ளை மாளிகை எதுவும் அறிவிக்கவில்லை. ஒபாமாவுடன் அமெரிக்க பத்திரிகையாளர்கள் சென்றாலும் அவர்களிடமும் அந்த இடத்துக்கு சென்றடையும் வரை ரகசியத்தை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஒபாமா அந்நாட்டு தலைநகர் காபூலுக்கு சென்று, அந்நாட்டு அதிபர் ஹமீது கர்சாயை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில மணி நேரம் மட்டும் அந்த ராணுவ தளத்தில் இருந்து அங்குள்ள ராணுவ வீரர்களுடன் பேசிவிட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீரர்களை பார்வையிடவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமா அதிபரான பின்னர் ஆப்கானிஸ்தான் செல்வது இது 4–வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.