டொனெட்ஸ்க், மே 27 – உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோடீஸ்வரரும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளருமான பெட்ரோ போரோஷென்கோ (48) வெற்றி பெற்று உக்ரைனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் கூறுகையில், “உக்ரைனில் போர், குழப்பம், குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டுவதுடன் நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுப்பேன். மேலும், ஐரோப்பாவுடன் வலுவான உறவுகளை மேற்கொள்ள ஆதரவளிப்பதுடன், ரஷ்யாவுடனான உறவினையும் சீர்படுத்த முயற்சிகள் எடுப்பேன்” என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தனது முதல் நடவடிக்கையாக உக்ரைனின் கிழக்கு வட்டார தொழில் நகரமான டொனெட்ஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், உக்ரைனில் புதிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தனது அரசு விரும்புகிறது என்றும் போரோஷென்கோ கூறியுள்ளார்.
இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் போரோஷென்கோ 54 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரான யுலியா 13 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளார்.
எனினும், “தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும்” என்று உக்ரைன் தேர்தல் ஆணையத் தலைவர் மைக்காலோ ஒகென்டோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டொனெட்ஸ்க் நகர் விமான நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் திங்கள்கிழமை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.