Home அரசியல் அடிப்படை அரசாங்க விதிகள் தெரியாமல் சரவணன் பேசக் கூடாது – சேவியர் சாடல்

அடிப்படை அரசாங்க விதிகள் தெரியாமல் சரவணன் பேசக் கூடாது – சேவியர் சாடல்

721
0
SHARE
Ad

Xavier---feature-2பிப்ரவரி 17 – வாயளவில் இனிக்கப் பேசுவதாக டத்தோஸ்ரீ அன்வாரை சாடும்  சரவணன்  எழுத்து பூர்வமாக ஏன் வழங்கவில்லை என்கிறார். பரிதாபத்திற்கு உரிய துணை அமைச்சர்  ஆழ்ந்த நித்திரையிலிருந்து இப்பொழுதுதான் எழுந்துள்ளார்.  அவை எழுத்துபூர்வமாக 2010 ம் ஆண்டே வழங்கப் பட்டு விட்டது.  புக்கு ஜிங்காவை  இன்னும் படிக்கவில்லை  என்பது இதன் மூலம் தெரிகிறது.

அதில் காணப்படும் சில திட்டங்களைப்  பக்காத்தான் ராயாட் நிழல் வரவு செலவுத் திட்டத்திலும் (பட்ஜட்) வெளியிட்டுள்ளது அதனைக் காப்பியடித்துத்துத்தான் தேசிய முன்னணியும்  மக்கள் உதவி நிதி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தியும் விட்டது. ஐ. எஸ். ஏ  என்ற உள்நாட்டு பாதுகாப்பு சட்டமும் அகற்றப்பட்டுள்ளது.

சரவணனில்  கேள்வி, மறைந்த நடிகர்  எம்.ஆர் ராதாவின் ” ஓன்ஸ் மோ ” என்ற நகைச்சுவையை நினைவு படுத்துகிறது.

#TamilSchoolmychoice

பக்காத்தான் மத்திய ஆட்சியைக் கைப்பற்றினால் 100 நாட்களில் சுடச்சுட  அடையாள அட்டையா என்று நக்கல் பாணியில் கேள்வி எழுப்பியுள்ள ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும் துணையமைச்சருமான டத்தோ சரவணன், அடையாளப்பத்திரங்கள்  இன்றி அன்றாடம் துன்பப்படும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின்  கண்ணீரை விடத் தேசியப் பதிவு இலாக்கா ஊழியர்களின் வேலை பளுவுக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளார்.

இந்தியச் சமுதாயத்தின் ஒரு பிரதிநிதியாக  அரசாங்கத்தில்  அமர்ந்து கொண்டு இந்தியர்களின் நீண்டகாலப் பிரச்சனைகளைத்  தீர்க்க  இவர்கள் வழங்கத் தவறிய உத்தரவாதத்தை, இப்பொழுது டத்தோ ஸ்ரீ அன்வார் வழங்கியது பாராட்டுக் குரியது.

ஆனால் டத்தோ சரவணன்  நையாண்டி செய்துள்ளார். அது என்ன வடையா சுடச்சுடச் சுட்டுத்தர என்கிறார்.  வடை சுடத் தகுதியானவர்கள் எல்லாம் ம.இ.கா வில் துணை அமைச்சர் ஆகிவிடலாம் என்பதற்கு இவரே சரியான சான்று. மலேசிய இந்தியர்களைப்  பாதிக்கும்  அடிப்படை விவகாரங்களைக் கூடச் சரியாக அறியாதவர்கள் எவ்வண்ணம் மக்களுக்குச் சேவை செய்வது?

தேசியப் பதிவு இலாக்கா மணிக்குப் பல ஆயிரம் அடையாளப் பத்திரங்களை வெளியிடும் திறன் வாய்ந்தது. அரசாங்கத்தில்  உள்ள அவருக்குத் தேசியப் பதிவு இலாக்காவின், உற்பத்தி திறன்  ஆற்றல் என்னவென்று  தெரியாமல், மணிக்கு 375 அடையாளக்கார்டு வழங்க முடியுமா என்று  கேட்கிறார்.

ஏன் கருப்பு தமிழனுக்கு  அடையாளப் பத்திரம் கொடுத்தால் அங்குள்ள கணினிகள் செயல் இழந்துவிடுமா? இல்லை  உங்களுக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு அரசியல் முதலீடு இல்லாமல் போய்விடும்  என்று அஞ்சுகிறீர்களா?

மலேசிய இந்தியர்களுக்கு  அடையாளப்பத்திரம் வழங்கும் பொறுப்பு டிரா மலேசியாவுடையதோ, மைடப்தாருடையதோ, டத்தோ சிவ சுப்ரமணியத்துடையதோ அல்ல, அது தேசியப் பதிவு  இலாக்காவின் வேலை.

அந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத்  தெரியும். ஆனால், தேசிய முன்னணி ஆட்சியில் இந்தியர்களுக்கு அடையாளப் பத்திரம் வழங்குவது கூட தேசியப் பதிவு இலாக்காவின் வேலையில்லை என்று ஆக்கி விட்டீர்கள், உங்கள் மை டப்தாரை வைத்து.

டத்தோ சரவணனக்கு அவர் வகிக்கும் துணை அமைச்சர் பதவி பொங்கல் வைப்பது மட்டுமல்ல, ஒரு சிறு அளவாவது  அரசாங்க நடைமுறைகள், சட்டத் திட்டங்களும் தெரிந்திருக்க வேண்டும். ஏற்கனவே எங்கே, எந்தக்காலத்தில்  தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் தந்தார்கள் என்று சவால் விட்டவர், அடுத்து  இலவசக் கல்வியைச் சிலாங்கூரில்  அமல் படுத்த சொல்லுங்கள் என்றார்.

நாட்டு மக்களுக்குக் கல்வி வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுடையது என்பதனை அறியாத துணை அமைச்சர். நாட்டில் பல  தமிழ்ப்பள்ளிகள் 6 ஏக்கர் நிலத்திற்கு மேல் நிலம் கொண்டுள்ள விவரத்தைக் கூட  அறியாத அவர், அடையாளப்பத்திர விவகாரத்தில் இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

அதாவது, அடையாள அட்டை பெறவேண்டிய வயதை எட்டிய ஒருவர்,  30 நாட்களுக்குள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற 1960 ம் ஆண்டு தேசியப் பதிவுச்சட்டம் கூறுகிறது அப்படியானால் அது விரைவாகச் செய்ய வேண்டிய காரியம், அடையாள அட்டைக்கு 100 நாட்கள் தருவதே அதிகம், ஆனால், இவரோ எப்படிக் கொடுக்க முடியும், அது  வடையா, தோசையா என்று கேட்டுள்ளார்.

இங்கே பிறந்து, வளர்ந்த இந்தியர்களுக்கு மட்டும் அடையாளப் பத்திரங்கள் கொடுக்க மரபணு சோதனை வேண்டுமாம். தேசிய முன்னணி ஆட்சி இன்னும் நீடித்தால் அடையாளப் பத்திரங்கள் எடுக்க இந்தியர்களை இறந்து போன அவர்களின் மூதாதையர்களின் எலும்புக்கூடு அல்லது இறந்தவர்களின் சாம்பலையும் எடுத்து வரச் சொல்வார் இந்தத் துணை அமைச்சர்.

ஆனால் அந்த நடைமுறைகள்  பிலிப்பினோக்கார்களுக்கும் , இந்தோனிசியர்களுக்கும், அண்மையில் வந்த பாகிஸ்தானியர்களுக்கும், வங்காளத் தேசிகளுக்கும் தேவையில்லை.

அவர்களுக்கு  எந்த டிராவும் தேவையில்லை, ஸ்கோரும் அவசியமில்லை, என்ற முறை கேடுகளைத் தட்டிக் கேட்கத் துணிவற்றவர்கள், திறமையற்றவர்கள் இந்தியர்களுக்கு 100 நாட்களில்  அடையாளப்பத்திரம் தருவதைப் பற்றி விமர்சிக்கலாமா என்பதனை நாம் சிந்திக்க வேண்டும்.