பெய்ஜிங், மே 28 – மலேசியா-சீனா உறவின் 40 ஆண்டுகள் நிறைவை அனுசரிக்கும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சீனாவுக்கு 6 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமரும் நஜீப்பின் தந்தையுமான காலஞ்சென்ற துன் அப்துல் ரசாக், சீனாவுடன் புதிய நட்புறவு அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த 1974 -ம் ஆண்டு சீனாவிற்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பின்னர் மலேசியா-சீனா உறவு வளர்ந்து 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்த 40 ஆண்டு கால உறவை நினைவுகூரும் வகையிலும், இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலோங்கும் வகையிலும் பிரதமர் தனது துணைவியாருடன் சீனா சென்றுள்ளார்.
சீன அதிபர் வரும் மே 31-ம் தேதி தனிபட்ட முறையில் நஜிப்புக்கு இரவு விருந்தளிக்கிறார். சீன அதிபர் அந்நாட்டுக்குச் செல்லும் மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு வழக்கமாக விருந்து எதனையும் அளிப்பதில்லை. சீன அதிபர் வழக்கமாக இரு தரப்பு சந்திப்புக் கூட்டத்தில் மட்டுமே கலந்து கொள்வார். வழக்கமாக சீனப் பிரதமர் தான், தங்கள் நாட்டிற்கு வருகை புரியும் தலைவர்களுக்கு விருந்து அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.