டொனெட்ஸ்க், மே 29 – உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய டொனெட்ஸ்க் விமான நிலையத்தை, மீண்டும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர இராணுவம் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
டொனெட்ஸ்க் விமான நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதனால், அவர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி, மீண்டும் விமான நிலையத்தை அரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, உக்ரைனின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோ போரோஷென்கோ உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் இராணுவம், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு டொனெட்ஸ்க் விமான நிலையத்தில் பதுங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. மேலும், போராட்டக்காரர்களின் மறைவிட பகுதிகளில் 500 பாராசூட் வீரர்கள் தரை இறக்கப்பட்டனர். அவர்கள் ரஷ்ய ஆதரவாளர்களுடன் போரிட்டு, கடும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில், போராட்டக்காரர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட 100–க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வமான தகவலை டொனெட்ஸ்க் பிரதமர் அலெக்சாண்டர் போரோடல் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இராணுவத் தரப்பில் சேதம் எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படம்: EPA