டெல்லி, மே 30 – பிரதமர் நரேந்திர மோடி வதோதரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி அந்த தொகுதியில், அவரது நெருங்கிய நண்பரான அமித் ஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழுத் தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்டிருந்தார். அமித் ஷாவின் கடும் உழைப்பு காரணமாக அந்த மாநிலத்தில் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.
இதையடுத்து, அவரை கவுரப்படுத்தும் விதமாக அமித் ஷாவை வதோதரா தொகுதியில் வேட்பாளராக நிறுத்த நரேந்திர மோடி விரும்புவதாகத் கூறப்படுகிறது. அமித் ஷா வெற்றி பெற்ற பின்னர் அவருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வதோதரா தொகுதியில் அமித் ஷா போட்டிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.