Home நாடு ஜாயிஸின் அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்!

ஜாயிஸின் அத்துமீறிய செயல் – வேதமூர்த்தி, வைத்தியலிங்கம் கடும் கண்டனம்!

788
0
SHARE
Ad

JAIS-raid-hindu-wedding-300x199கோலாலம்பூர், ஜூன் 3 – கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோயில் ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தை இஸ்லாமிய சமய அதிகாரிகள் (ஜாயிஸ்) தடுத்து நிறுத்தியது நாடெங்கிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பெண்ணின் தந்தை இஸ்லாம் மதத்திற்கு மாறி இருந்ததால், அவரது மகளான மணப்பெண் சிறுவயதிலேயே இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும், எனவே இத்திருமணத்தை இந்து முறைப்படி நடத்த இயலாது என்றும் ஜாயிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜாயிஸ் அதிகாரிகளின் இந்த செயலுக்கு மலேசிய இந்து சங்கம் மற்றும் ஹிண்ட்ராப் இயக்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

வேதமூர்த்தி கண்டனம்

ஜாயிஸ் அமைப்பின் இந்த அத்துமீறிய செயல், இஸ்லாம் அல்லாதோரின் உணர்வுகளை மிகவும் பாதிக்கும் என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியுள்ளார்.

மேலும், இஸ்லாம் அல்லாதோரின் உணர்வுகளை ஜாயிஸ் போன்ற அமைப்புகள் சிறிதும் பொருட்படுத்துவதில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம் சமயத்தினருக்கு எந்த அளவிற்கு அவர்களின் மதம் மீது பற்று உள்ளதோ அதே உணர்வு தான் மற்றவர்களுக்கும் உண்டு என்றும் வேதமூர்த்தி தெரிவித்தார்.

வைத்தியலிங்கம் கண்டனம்

ஜாயிஸ் அதிகாரிகளின் செயல்கள் அண்மை காலமாக அத்துமீறிப் போவதாகவும், ஆன்மீக அமைப்பிற்கே உரிய அமைதி, மனிதாபிமானம், உணர்வுகளை புரிந்து கொள்ளுதல் போன்ற எந்த ஒரு அம்சங்களும் ஜாயிஸ் -க்கு இல்லை என்றும் மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஆலோசகருமான டத்தோ அ.வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

சக மனிதர்களை மதிக்கும் பண்பு கூட அவர்களிடம் இல்லை. இந்த திருமணத்தை நிறுவதற்கு முறையாக நீதிமன்ற ஆணை கூட அவர்கள் பெற்றிருக்கமாட்டார்கள் என்றும் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு இஸ்லாமியப் பெண் என்பதை இதுவரை நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும் மணப்பெண் மன்றாடியும் ஜாயிஸ் அதிகாரிகள் அதை காது கொடுத்தும் கேட்கவில்லை என்றும் வைத்தியலிங்கம் குற்றம்சாட்டினார்.

நீதி எப்போதும் ஒரு சாரரை சார்ந்து இருக்கக்கூடாது என்று கூறிய வைத்தியலிங்கம், அப்பாவிகளின் வாழ்க்கையில் இதுபோன்ற அமைப்பினர் விளையாடுவதை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.