கோலாலம்பூர், ஜூன் 3 – இந்து திருமணத்தில் புகுந்து திருமணத்தை தடுத்து நிறுத்தியதற்கு காரணம், மணப்பெண் இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொண்டு தங்களது அடையாளத்தை இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களாகவே காட்டி வந்திருப்பது தான் என ஜாயிஸ் விளக்கமளித்துள்ளது.
மணப்பெண் ஒரு வழக்கறிஞரை வைத்து சட்டப்பூர்வமாக தனது அடையாளப் பத்திரங்களிலுள்ள இஸ்லாம் மதத்தை நீக்கியிருக்க வேண்டும் என்றும் ஜாயிஸ் குறிப்பிட்டுள்ளது.
மணப்பெண்ணின் அடையாள அட்டையில், ஸரீனா அப்துல் மஜித் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவர் சட்டப்பூர்வமாக வழக்கறிஞரை வைத்து தனது பெயரையும், மதத்தையும் இஸ்லாமில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் ஜாயிஸ் அமைப்பின் துணை இயக்குநர் அகமட் ஸாக்கி அர்ஷாத் கூறியுள்ளார்.
அந்த பெண் இதுவரை இஸ்லாம் மதக் கோட்பாடுகளை பின்பற்றியதில்லை என்றும், பெயரளவில் மட்டுமே அவர் முஸ்லிமாக இருப்பதாகவும் அகமட் ஸாக்கி ஒப்புக்கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோயில் ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தில் புகுந்த இஸ்லாமிய சமய அதிகாரிகள் (ஜாயிஸ்), மணப்பெண் முஸ்லிம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.