சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 4 – தொழில்நுட்ப உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் முதல் வாரத்தை, அனைத்துலக ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாடாக கொண்டாடி வருகின்றது.
இந்த வருடத்திற்கான அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு (WWDC2014), நேற்று முன்தினம் மிகச் சிறப்பான முறையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் துவங்கியது. இது ஆப்பிள் நிறுவனத்தின் 25-ம் ஆண்டு மாநாடு என்பது கூடுதல் சிறப்பாகும்.
நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கிய, இந்த மாநாட்டின் தலைமை உரையை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.
சுமார் 6,000 மேம்பாட்டாளர்கள் நிறைந்திருந்த இந்த மாநாட்டில் குக்கின் தலைமை உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
கடந்த கால மாநாடுகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஐபோன்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளின் தயாரிப்பை விடுத்து, இந்த ஆண்டு, முழுக்க முழுக்க மென்பொருள் தயாரிப்பில் ஆப்பிள் தனது நிலைப்பாட்டை உணர்த்தியது.
ஐஒஎஸ் 8 அறிமுகம்
போட்டி நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் தங்கள் இயங்குதளங்களின் புதிய பதிப்புகளை மேம்படுத்தி வரும் வேளையில், ஆப்பிள் தனது ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான புதிய ஐஒஎஸ் 8 (iOS 8) மற்றும் மேக் கணினிகளுக்கான மேக் இயங்குதளம் (Mac OS) போன்றவை பற்றிய அறிவிப்புகளைப் பகிர்ந்து கொண்டது.
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ள ஐஒஎஸ் இயங்குதளங்களின் புதிய பதிப்பில், ஐஒஎஸ் மற்றும் மேக் ஆகிய இரு இயங்குதளங்களையும் ஒன்றை ஒன்று எளிதான முறையில் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.
ஆவணங்கள், காணொளிக் காட்சிகள் மற்றும் படங்கள் ஆகியற்றை உருவாக்குவது மட்டும் அல்லாமல் அதில் தன்னிச்சையான மாற்றங்களையும் செய்ய முடியும்.
சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய ஆப்பிளின் புதிய மாற்றங்கள்
மேம்பாட்டாளர்களுக்கான மாநாடாக WWDC2014 கருதப்பட்டாலும், முழுக்க முழுக்க அடிப்படைப் பயனர்களின் எதிர்பார்ப்புகளைச் சார்ந்தே, ஆப்பிளின் தயாரிப்புகள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
புதிய இயங்குதளங்களில் பல்வேறு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டாலும், செயலிகளுக்கிடையே தன்னிச்சையான தகவல் தொடர்பினை உருவாக்கியுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். உதாரணமாக இதயத் துடிப்பை அளக்கும் செயலி, அது பற்றிய தகவல்களை மற்ற செயலிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
WWDC 2014 மாநாட்டில் செல்லியல் தொழில்நுட்ப ஆலோசகர் முத்து நெடுமாறன்
உலகப் புகழ் பெற்ற இந்த மாநாட்டில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக பங்கெடுத்து வரும் செல்லினம், செல்லியல் மற்றும் முரசு எழுத்துருக்களின் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் இந்த மாநாடு பற்றியும், புதிய வெளியீடுகள் பற்றியும் தம் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இது பற்றி அவர் கூறுகையில், “ஆப்பிளின் இந்த புதிய வெளியீடுகள், ஒரு செயலியின் மீது நாம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றிவிடுகின்றன” என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டின் போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்குடன் முத்து நெடுமாறன் எடுத்துக் கொண்ட பிரத்தியேகப் புகைப்படத்தை இங்கே காணலாம்.
(அடுத்த சில நாட்களுக்கு செல்லியல் வாசகர்களுக்காக WWDC2014-ல் நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் பல புதிய செய்திகள் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து நேரடியாக நமது தளத்தில் பதிவு செய்யப்படும்.)