கோலாலம்பூர், ஜூன் 4 – மாயமான எம்எச்370 விமானம் பற்றிய பலவிதமான ஆரூடங்களும், வதந்திகளும், தகவல்களும் சற்றே தணிந்திருந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் விமானம் எரிந்த நிலையில் இந்தியப் பெருங்கடலின் மேலே பறந்ததைப் பார்த்ததாக புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளது தற்போது ஊடகங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
கேத்ரினா டீ (வயது 41) என்ற அந்த பெண் தன் கணவருடன் மார்ச் மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தாராம். விமானம் காணாமல் போன நாளான மார்ச் 8 -ம் தேதி அவர், அதிகாலையில் கொச்சியில் இருந்து தாய்லாந்து புக்கெட் தீவுக்கு கடல் வழிப் பயணத்தை அவர் மேற்கொண்டிருந்த போது விமானம் ஒன்று எரிந்து நிலையில் போனதைக் கண்டுள்ளார்.
அந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியதையும் அவர் கண்டுள்ளார். அந்த நேரத்தில் தன்னுடன் பயணம் செய்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் என்றும் கேத்ரினா கூறியுள்ளார்.
இது குறித்து கேத்ரினா மேலும் கூறுகையில், “விமானம் ஒன்று எரிந்த நிலையில் பறந்ததைப் பார்த்தேன். பின்னர் அப்படி இருக்காது என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும், அது என் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருந்தது. இதற்கு முன்பு ஆரஞ்சு வண்ணத்தில் விமானத்தில் விளக்குகள் இருந்ததாகக் கண்டதில்லை.” என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த விமானத்தின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்தது என்றும், அந்த விமானத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு விமானங்களை தான் கண்டதாகவும் கூறியுள்ளார்.
முன்னே சென்ற விமானத்தில் இருந்து வித்தியாசமாக ஆரஞ்சு வண்ணத்திலான வெளிச்சமும், அதன் பின்னால் கண்ட இரண்டு விமானங்களில் வழக்கமான வெளிச்சமும் இருந்ததாக கேத்ரினா தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அந்த இரண்டு விமானங்களும் எரிந்த விமானத்திற்கு உதவ வந்திருக்கலாம் என்று தான் நினைத்துக் கொண்டதாகவும் கேத்ரினா கூறியுள்ளார்.
தான் பார்த்தது எரிகற்களாகக் கூட இருக்கலாம் என்ற காரணத்தால் அப்போது அது பற்றி தனது கணவரிடம் பேசவில்லை என்றும், பின்னர் விமானம் காணாமல் போன செய்தி அறிந்த பின்னர் மார்ச் 10 -ம் தேதி தான் கணவரிடம் கூறியதாகவும் கேத்ரினா கூறியுள்ளார்.
கேத்ரினாவின் இந்த தகவல் தற்போது ஊடகங்கள் அனைத்திலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட செய்தியை லண்டனைச் சேர்ந்த பிரபல ‘தி டெலிகிராப்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.