கொழும்பு, ஜூன் 7 – இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற போரின் காரணமாக இதுவரை 18600 பேர் காணாமல் போயுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு புகார்கள் வந்துள்ளன.
இந்த தகவலை அக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த குழு கடந்த ஜனவரியில் தொடங்கி கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உட்பட மூன்று இடங்களில் தனது விசாரணையை முடித்துள்ளது.
நான்காவதாக மட்டக்களப்பில் இந்த வாரம் விசாரணை நடத்தப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 18600 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து அந்த விசாரணைக்குழுவின் செயலாளரான குணதாச கூறிகையில், “1990-ம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை காணாமல் போனவர்கள் பற்றி புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது வரை 18600 பேர்கள் காணாமல் போனதாக புகார்கள் வந்துள்ளன. அதன் மீதான விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஐ.நா தலைவர் பான் கீ மூனை இலங்கை அமைச்சர் டக்ளஸ் அழகப்பெருமாள் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இலங்கை அரசு இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை.