Home உலகம் எம்எச் 370 – தகவல் கொடுப்பவர்களுக்கு 3 மில்லியன் அமெரிக்க வெள்ளி சன்மானம்! – பயணிகள்...

எம்எச் 370 – தகவல் கொடுப்பவர்களுக்கு 3 மில்லியன் அமெரிக்க வெள்ளி சன்மானம்! – பயணிகள் உறவினர் அறிவிப்பு

658
0
SHARE
Ad

MH370-planeபெய்ஜிங், ஜூன் 6 – காணாமல் போன எம்.எச்.370 விமானத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள் ஒன்று திரண்டு காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தாங்களாகவே நேரடியாக அதிரடியாக இறங்கியுள்ளனர்.

எம்எச் 370 விமானத்தைக் கண்டுபிடிக்க வழி வகுக்கும் தகவல்களைத் தருபவர்களுக்கு 3 மில்லியன் அமெரிக்க வெள்ளி சன்மானம் வழங்கும் திட்டமொன்றை அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கான நிதி பொதுமக்கள் வழங்கும் நன்கொடைகளின் வழி திரட்டப்படும்.

#TamilSchoolmychoice

சீனா, மலேசியா பயணிகளின் உறவினர்கள் பங்கு பெறவில்லை

எம்எச் 370 விமானப் பயணியான 50 வயதான பிலிப் வுட் என்பவரின் துணைவியாரான சாரா பாஜ் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டாலும், இதுவரை உருப்படியான ஒரு தகவல்கூட கிடைக்கவில்லை என்பதை வைத்துப் பார்க்கும் போது யாரோ எதையோ மறைக்கின்றார்கள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது எனக் கூறியுள்ளார்.

சாரா பெய்ஜிங்கில் பணியாற்றி வரும் ஓர் ஆசிரியர் என்பதோடு, மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியருமாவார்.

“எம்எச் 370 சன்மானம் – உண்மையைக் கண்டுபிடிக்கும் தேடுதல்” (‘Reward MH370: The Search for the Truth’) என்ற பெயருடன் இந்த நிதித் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கப்படவிருக்கின்றது.

‘இண்டிகோகோ’ (indiegogo) என்ற இணையத் தளப் பக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்படும். ஒருவர் குறைந்த பட்சம் 5 அமெரிக்க டாலர் வழங்கலாம். இதற்கு முன் இண்டிகோகோ இது போன்ற நிதி திரட்டும் முயற்சிகள் எதிலும் ஈடுபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சாரத் திட்டத்தை எம்எச் 370 விமானத்தில் இருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் உறவினர்கள் முன்னின்று தொடக்கியுள்ளனர். ஆனால் சீனா, மலேசியாவிலிருந்து இதுவரை யாரும் இதில் பங்கு கொள்ள முன்வரவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

100 மில்லியன் செலவழித்தும் ஒரு பொருள்கூட கிடைக்கவில்லை

“100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்தும் அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் இந்தப் பிரச்சனையை கடலுக்குச் சென்று படகுகளோடு அணுகப்போவதில்லை. மாறாக, மனித அறிவாற்றலைக் கொண்டு இந்தப் பிரச்சனையை இனி நாங்கள்  அணுகப் போகின்றோம்” என்றும் சாரா பாஜ் தெரிவித்துள்ளார்.

இதுவரை காணாமல் போன விமானத்தில் ஏதாவது ஒரு பாகம் – பயணிகள் நாற்காலியின் உறை போன்ற ஒரு பொருள் கிடைத்திருந்தாலும் நாங்கள் வேறு மாதிரியான கோணத்தில் இந்தப் பிரச்சனையை அணுகியிருப்போம். ஆனால் அப்படி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இந்த திட்டத்தின் வழி திரட்டப்படும். அதில் 3 மில்லியன் ரிங்கிட் விமானத்தைக் கண்டுபிடிக்கும் தகவல் தருவோருக்கு சன்மானமாக வழங்கப்படும்.

எஞ்சிய 2 மில்லியன் அமெரிக்க டாலரில் அனைத்துலக துப்பறியும் நிறுவனம் ஒன்று சேவைக்கு அமர்த்தப்பட்டு, விமானம் குறித்த துப்புகள் துலக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தகவல்களை யுஎஸ்ஏ டுடே என்ற அமெரிக்கப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.