கோலாலம்பூர், ஜூன் 7- “மக்கள் அனைவரும் அரசாங்கத்துடன் ஒன்றாக இணைந்து தோள் கொடுத்து செயல் பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹலிம் தனது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக அறைகூவல் விடுத்தார்.
அனைத்து திட்டங்களும் இலக்குகளும் வெற்றிகரமாக அமைவதற்கு மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்களின் ஆதரவு இல்லாமல் உலகின் எந்த நாடுகளும் முன்னேற்றத்தை அடைந்து விட முடியாது. சாதனை படைக்கவும் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டின் அரசுரிமையை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் நாட்டை தற்காப்பதும் ஒவ்வொரு பிரஜையின் கடமையாக அமைந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான வலுவான ஆதரவும் ஒத்துழைப்பும் எதிர் காலத்தில் நாட்டில் பல்வேறு வெற்றிகளுக்கு வழிவகுக்கும் எனவும் மாமன்னர் தெரிவித்தார்.
நேற்று மாமன்னரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் அரண்மனையில் விருதளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த விருதளிப்பு நிகழ்வில் மாமன்னர் உரை நிகழ்த்தினார். மாட்சிமை தங்கிய பேரரசியார் துவாங்கு ஹஜ்ஜா ஹமீனாவும் இதில் கலந்து சிறப்பித்தார்.