கோலாலம்பூர், ஜூன் 10 –மலேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், புரோட்டோன் நிறுவனம் தனது வணிக வியூகங்களை மாற்றிக்கொள்ளும் என்று கூறியிருக்கின்றார்.
மலிவு விலை கார் தயாரிக்கும் நிறுவனம் என்ற நிலையில் இருந்து உலகத்தரம் வாய்ந்த கார்களை தயாரிக்கும் நிறுவனமாக புரோட்டோன் உருமாறும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
“உங்களுக்கு ஓர் நல்ல கார் வேண்டும் என்றால் தரக்குறைவான காரின் விலையில் அதை தரமுடியாது. எனவே, அதிக விலையுல்ல உலகத் தரம் வாய்ந்த கார்களை தயாரிப்பதில் புரோட்டோனின் தற்போதைய நோக்கமாகும்” என அவர் புரோட்டோன் தலைவர் என்ற முறையில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கிய போது கூறினார்.
தற்போது புரோட்டோன் ‘பிரிவி’ மற்றும் ‘சுப்ரீமா’ ரக கார்களை தயாரித்து 80 ஆயிரம் மலேசிய ரிங்கிட் விலையில் விற்று வருகிறது. ஆனால்,அதே தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அடுத்தரக கார் 120,000 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.
மக்களுக்கு மலிவு விலை கார் வேண்டுமென்றால் புரோட்டோன் தொடர்ந்து அவற்றை தயாரிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், புரோட்டோன் நிறுவனத்திற்காக எந்தவொரு நிதி ஒதுக்கீடையும் கோரி அனைத்துலக வர்த்தக தொழில் அமைச்சுக்கு புரோட்டோன் விண்ணப்பிக்கவில்லை என்றும் மகாதீர் உறுதிப்படுத்தினார்.
புரோட்டோன் தனியார் நிறுவனம் என்பதால் தாங்கள் அரசாங்கத்திற்கு நிதிகேட்டு விண்ணப்பிக்க போவதில்லை என்றும் கூறிய மகாதீர் ஆய்வுகளை மேம்படுத்துவதன் மூலம் புரோட்டோன் வளர்ச்சி அடைய இலக்கு கொண்டிருக்கின்றது என்று கூறினார்.