கோலாலம்பூர், ஜூன் 10 – மலேசியாவுக்கு சீனாவுக்கும் இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவின் அடையாளமாக கடந்த வாரம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தம்பதியர் சீனாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்தின் போது சீனா அரசாங்கம் தமது உடல்நல விஷயத்திலும் பாதுகாப்பு விஷயத்திலும் அதிக அக்கறையுடன் நடந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8 -ம் தேதி சீனப் பிரஜைகள் உட்பட 239 பயணிகளுடன் எம்எச் 370 விமானம் காணாமற் போன சம்பவம் தொடர்பான சர்ச்சைகள் நீடிக்கும் வேளையில் பிரதமர் இந்த வருகையை மேற்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எம்எச் 370 விமான விவகார சர்ச்சைக்கு மத்தியிலும் சீனா தமது நலனில் காட்டிய அக்கறை தம்மை மிகவும் நெகிழ்ச்சியுறச் செய்ததாக பிரதமர் சொன்னார்.
ஒரு சாதாரண முட்டையைக் கூட என் விருப்பம் போல நான் சாப்பிட முடியவில்லை. எப்போதுமே நான் அரைவேக்காட்டு அளவில் தான் முட்டையைச் சாப்பிடுவேன். ஆனால், என் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் அந்த முட்டை10 நிமிடங்கள் வேகவைக்கப்பட வேண்டும் என்று சீனாவால் ஆணையிடப்பட்டிருந்தது என்று அவர் இங்கு குறிப்பிட்டார்.
மேலும் எனக்கு பாதுகாப்புடன் கூடிய 3 ஆடம்பரக் கார்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. உலகத்தரம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை 4 பேர் மட்டுமே கண்டுகளிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள் என்றும் அவர் சொன்னார்.
இந்தப் பயணம் இருநாடுகளுக்கிடையிலான 40 ஆண்டுகால உறவு வலுப்பெற அமைந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.