ஜூன் 11 – நட்பு ஊடகமான பேஸ்புக், புகைப் படங்களை குறுந்தகவல் போன்று அனுப்பும் ‘போட்டோ மெசேஜ்ஜிங்’ (Photo Messaging) செயலிகளை உருவாக்கி வருவதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் ஆருடங்கள் கூறிவந்தன. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக அந்த செயலியானது ஆப்பிள் ஸ்டோரில் வெளியானது.
கடந்த திங்கள் கிழமை பேஸ்புக் நிறுவனம், தனது போட்டோ மெசேஜ்ஜிங் செயலியான ‘ஸ்லிங்ஷாட்’ (SlingShot)-ஐ தவறுதலாக ஆப்பிள் ஸ்டோரில் வெளியிட்டது. ஆனால் வெளியான சில மணி நேரங்களில் அந்த செயலி திரும்ப பெறப்பட்டது.
இந்த ஸ்லிங்ஷாட் செயலியின் மூலம் பயனர்கள் தங்கள் சூழலுக்கு தகுந்தவாறு எடுத்த படங்களை உடனுக்குடன் எண்ணற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதில் சிறப்பானதொரு அம்சம் என்ன வென்றால் குறுந்தகவல்களை பெறும் நண்பர்கள் அதனை பார்க்க வேண்டும் என்றால் குறுந்தகவல் அனுப்பியவருக்கு தங்கள் புகைப்படங்களை அனுப்ப வேண்டும். மேலும், மற்ற திறன்பேசிகளுக்கு அனுப்பப்படும் ஸ்லிங்ஷாட் குறுந்தகவல்கள் தன்னிச்சையாக அழியும் தன்மை கொண்டவை.
இது பற்றி பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஆப்பிள் ஸ்டோரில், ஸ்லிங்ஷாட் தவறுதலாக வெளியிடப்பட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஸ்லிங்ஷாட் செயலியின் மூலம் பயனர்கள் தங்கள் அன்றாட நிகழ்வுகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.