Home இந்தியா விஜயகாந்தின் முதல் கோணலால் முற்றிலும் கோணலாகிபோன தேமுதிக!

விஜயகாந்தின் முதல் கோணலால் முற்றிலும் கோணலாகிபோன தேமுதிக!

855
0
SHARE
Ad

vijayakaanthசென்னை, ஜூன் 12 – நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் செய்த முதல் கோணலால்தான் விஜயகாந்த் கட்சிக்கு முற்றிலும் கோணலாக முடிந்துவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சரியான நேரத்தில் கம்பீரத்துடன் உரிய முடிவை எடுத்திருந்தால் தேமுதிக தனது வாக்கு வங்கியில் பாதியை இழந்து பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்பது கட்சியினரின் புலம்பலாக உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் கடைசி நேரத்தில் இணைந்து அதிக சீட்டுகளை பெற்றது தேமுதிக. தமிழகத்தில் மொத்தம் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

#TamilSchoolmychoice

இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது, அக்கட்சியின் வாக்கு சதவீதம் சரிந்து வருகிறது என்பதுதான். கடந்த நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டால் பலமான பாஜக கூட்டணியில் இருந்தும்கூட தேமுதிக படுபாதாளத்தில் பாய்ந்துள்ளதை தெரிந்துகொள்ள முடியும்.

சுமார் 10 அல்லது 8 சதவீத வாக்குகளை தொடர்ச்சியாக பெற்றுவந்த தேமுதிக, நாடாளுமன்ற தேர்தலில் 5.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது, தனது வாக்கு வங்கியில் பாதியை பறிகொடுத்து நிற்கிறது.

விஜயகாந்த்துக்கு பல கட்சி கூட்டணி பலம் இருந்த நிலையில் இப்படியொரு தோல்வியை சந்தித்துள்ளது என்றால் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் என்ன நிலையோ என்று தொண்டர்கள் பலரும் யோசிக்க தொடங்கிவிட்டனர்.

vaiko-vijayakanth-tajnath-singhஆனால் பாஜக கூட்டணியிலிருந்த பிற கட்சிகள் தேமுதிக அளவுக்கு சரிவை சந்திக்காதை பார்க்கும்போது கூட்டணி கட்சிகளின் வாக்குகள் விஜயகாந்த்துக்கு விழவில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

அதற்கு விஜயகாந்த் துவக்கத்தில் செய்த முன்பின் முரணான செயல்கள்தான் காரணம். தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்திலுள்ள தேமுதிக தனது கம்பீரத்தை உரிய வகையில் பறைசாற்ற தவறிவிட்டதுதான் கூட்டணி கட்சி தொண்டர்கள் கோபத்துக்கு காரணம்.

ஆரம்பத்திலேயே பாஜக கூட்டணியில் இணைந்தது மதிமுக. ஆனால் ஆரம்பம் முதலே இழுபறியை நீடித்தது தேமுதிக. கூடுதல் தொகுதிகள் தேவை என்பதற்காக விஜயகாந்த் பாஜக கூட்டணிக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். திடீரென டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பீதி கிளப்பினார்.

பாஜகவுடன் ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவரும்போதே, ‘இதோ டீ குடித்துவிட்டு வருகிறேன்’ என்பதைப்போல திடுதிப்பென மலேசியா பறந்துவிட்டார். இதையெல்லாம் பார்த்த பாஜக, மதிமுக, பாமக கட்சி தொண்டர்கள் ‘விஜயகாந்த் அலப்பறை தாங்க முடியலை’ என்று கடுப்பேறினார்கள்.

vijayakanth (1)ஜெயலலிதாவுடனான விஜயகாந்த்தின், சட்டசபை மோதலுக்கு பிறகு தேமுதிக கட்சி சட்டசபை உறுப்பினர்கள் சிலர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இதனால் விஜயகாந்த் தலைமை பண்பு மீதான மதிப்பு குறைந்து, அவரது கட்சியின் செல்வாக்கு கிடுகிடுவென குறைந்துவந்தது.

அப்போது கிடைத்த பாஜக கூட்டணியை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அலட்ச்சியம் செய்தார் விஜயகாந்த். இதனால்தான் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரின் தமிழகம் தழுவிய பிரச்சாரத்துக்கு பிறகும் அவரது கட்சிக்கு சொல்லிக் கொள்ளும்படி வாக்குகள் கிடைக்கவில்லை.

14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக சுமார் 19 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 22 லட்சம் வாக்குகளையும், எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க 18 லட்சம் வாக்குகளையும் வாங்கியுள்ளன.

தே.மு.தி.கவைவிட பாதி இடங்களில், அதாவது 7 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 15 லட்சம் வாக்குகளை வாங்கியுள்ளது. கூட்டணி கட்சி வாக்காளர்கள் தேமுதிகவை கைவிட்டுவிட்டதை இது காண்பிக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தனர்.