Home நாடு இந்திராகாந்தியின் மகளை மீட்டுவர மீண்டும் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

இந்திராகாந்தியின் மகளை மீட்டுவர மீண்டும் காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

720
0
SHARE
Ad

M. Indira Gandhi, a Hindu, center, with her children Karan, 11, left, and Tevi, 13, in an undated family photo.ஈப்போ, ஜூன் 12-இஸ்லாத்திற்கு மதம் மாறிய  கணவரிடமிருந்து இந்திரா காந்தியின் மகளை காவல் துறையினர் மீட்டு அவரிடமே மீண்டும் ஒப்படைக்க விடுத்த உத்தரவை  ஈப்போ உயர் நீதிமன்றம் நேற்று மறு உறுதிபடுத்தியது.

பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை 30 நாட்களுக்குள் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள் என்று நேற்று ஈப்போ உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

குழந்தையைக் கண்டு பிடித்து கொண்டுவரத் தவறினால் ஏன் உத்தரவுக்கு கீழ்ப்படியவில்லை என்று நீதிமன்றத்திற்கு காவல் துறையினர் பதில் கூற வேண்டும்.

#TamilSchoolmychoice

நீதிமன்றம் இவ்வாறான உத்தரவு பிறப்பிப்பது  அபூர்வமாகும் என்று இந்திரா காந்தியின் வழக்கறிஞர் குலசேகரன் கூறினார்.

நீதிபதி லீ ஸ்வி  செங் இத்தகைய ஓர் உத்தரவை அனுமதித்தது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக குலசேகரன்  தெரிவித்தார்.

இன்று இங்குள்ள உயர் நீதிமன்ற நீதிபதி லீ சிவி செங் முன்னிலையில்  திருமதி இந்திரா காந்தியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குலசேகரன், கடந்த மே 30 ஆம் தேதி ஈப்போ உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய  கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லாவிடமிருந்து மகள் பிரசன்னா டிக்சாவை (வயது 6) காவல் துறையினர் மீட்டு தாயார் திருமதி இந்திராகாந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுவை சமர்ப்பித்தார்.

மனுவை விசாரித்த பிறகு குழந்தையை காவல் துறையினர் மீட்டு தாயார் இந்திரா  காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நீதிபதி மறு  உறுதி படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் எம்.குலசேகரன் இங்கு கூறினார்.

நடுநிலை வகிக்கும் விதத்தில் காவல் துறையினர் மத விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அக்குழந்தைகளை சமூக நல இல்லங்களில் வைத்திருப்பார்கள் என்று காவல் துறைத் தலைவர் கூறியுள்ள கருத்துக்கு பதிலாக நீதிமன்றத்தின் நிலைபாட்டை உறுதி செய்து கொள்ள திருமதி இந்திரா காந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

இஸ்லாத்திற்கு மதம்  மாறிய கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லாவிடமிருந்து தன் மகள் பிரசன்னா டிக்சாவை மீட்பதில் சட்டப் போராட்டத்தில் இரண்டு முறை வெற்றி பெற்ற திருமதி இந்திரா காந்தி நீண்ட காலமாக தன் மகளை காண்பதற்கும், மீட்பதற்கும் காத்திருக்கிறார்.

மகள் 11 மாத கைக்குழந்தையாக இருக்கும் போது கணவரால் கொண்டு செல்லப்பட்டு இன்று அக்குழந்தைக்கு 6 வயது ஆகிறது. ஆனால் பிள்ளையை கணவர் கண்ணில்  காட்ட மறுத்து வருகிறார்.

2010 ஆம் ஆண்டில் குழந்தையை ஒப்படைக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  அலட்சியப் படுத்தியவர் பிறகு 2014 இல் மீண்டும் நீதிமன்ற ஆணையை புறக்கணித்தார்.

ஜூன் 6 ஆம் தேதிக்குள் மகளை வழக்கறிஞர் குலசேகரன்  அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு தாயார் இந்திரா  காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி தவறினால் நீதிமன்றத்தின் கைது ஆணை செயல்படுத்தப்படும் என்ற கடுமையான உத்தரவையும்  அலட்சியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குழந்தையை மீட்டுத்தருவதில் காவல் துறையினர் மெத்தனப் போக்கை கடைபிடிக்கின்றனர்.

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய – நீதிமன்றத்தின் ஆணையைப் பின்பற்ற வேண்டிய காவல் துறைத் தலைவர் அதற்கு முரண்பாடான முறையில் செயல்படுகிறார் என்பதும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

தங்கள் தரப்பு விளக்கங்களை செவிமெடுத்த நீதிபதி குழந்தை பிரசன்னா டிக்சாவை தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைப்பது காவல் துறையின்  பொறுப்பு என்ற தனது தீர்ப்பை மறு  உறுதிப்படுத்தினார் என்றும் வழக்கறிஞர் எம்.குலசேகரன் கூறினார்.