சாவ் பாலோ, ஜூன் 13 – இன்று அதிகாலை 4 மணிக்குத் நடந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான முதல் ஆட்டத்தில் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடான பிரேசில் மற்றும் குரோசியா நாடுகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் குரோசியா முதல் கோலை அடித்து பிரேசிலையும் அரங்கம் முழுக்க நிறைந்திருந்த இரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
பந்தைத் தடுப்பதற்கு பதிலாக, பிரேசில் ஆட்டக்காரர் மார்சிலோ தவறுதலாக பிரேசில் கோல் கம்பத்திற்குள் அவரே பந்தை தட்டிவிட குரோசியா முதல் கோலை பதிவு செய்தது.
ஆனால், பலரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் நெய்மார் அபாரமாக விளையாடி முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு முன்பாக பிரேசிலின் முதல் கோலை அடித்து சம நிலையாக்கினார்.
அப்போது அரங்கில் பெரும்பான்மையாக நிறைந்திருந்த பிரேசில் நாட்டு இரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இரண்டாவது பாதி ஆட்டம்
1 -1 என்ற நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது.
68வது நிமிடத்தில் பிரேசிலின் ஆட்டக்காரர், குரோசியா கோல் கம்பத்தின் முன்னால் கீழே தள்ளிவிடப்பட்ட, பிரேசிலுக்கு ஒரு பினால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது.
பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் நெய்மார் அந்த பினால்டி வாய்ப்பை கோலாக்கினார். இதைத் தொடர்ந்து பிரேசில் 2 -1 என்ற நிலையில் முன்னணி வகித்து வந்தது.
ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த நேரத்தில் பிரேசில் ஆட்டக்காரர் ஓஸ்கார் மற்றொரு கோல் அடிக்க, 3-1 என்ற நிலையில் பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் குரோசியாவை வெற்றி கொண்டு காற்பந்து அரங்கில் தனது புகழையும், பெருமையையும் நிலைநாட்டிக் கொண்டது.
-படங்கள்: EPA