Home இந்தியா எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும்: சபாநாயகருக்கு சோனியா கடிதம்!

எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும்: சபாநாயகருக்கு சோனியா கடிதம்!

514
0
SHARE
Ad

soniyaபுதுடெல்லி, ஜூன் 13 – நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்று கோரி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 10 சதவீதம் உறுப்பினர்களையாவது பெற்ற கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும்.

அதன்படி, 543 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற மக்களவையில் குறைந்தது 54 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியைத்தான் பிரதான எதிர்க்கட்சியாகவும், அந்த கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரைத்தான் அவையில் எதிர்க்கட்சி தலைவராகவும் அறிவிக்க முடியும்.

#TamilSchoolmychoice

ஆனால் தற்போதைய 16–வது நாடாளுமன்றத்தில், 2-வது பெரிய கட்சியான காங்கிரசுக்கு வெறும் 44 உறுப்பினர்களே உள்ளனர். இதனால், காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க கோரி அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்கள் வேண்டும் என்று நாடாளுமன்ற சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விதிமுறை எதுவும் கிடையாது என்றும், அவையில் ஆளும் கட்சிக்கு அடுத்து அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையின் எதிர்க்கட்சியாக அனைத்து தகுதிகளும் உள்ளன என்றும் கூறி இருக்கிறார்.

சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சோனியா காந்தியின் இந்த கோரிக்கையை நிராகரிக்க நேர்ந்தால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம்.

ஏற்கனவே, 1952–ல் இருந்து 1977-ஆம் ஆண்டு வரை அமைந்த முதல் ஐந்து நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சி தலைவர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. 1952–ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்றொரு கட்சியாக இருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே.

489 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு வெறும் 16 உறுப்பினர்களே இருந்தனர். எனவே அப்போது அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை.

1977–ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தபோது அக்கட்சியைச் சேர்ந்த ஒய்.பி.சவான் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தனர்.